புலம்பெயர் தமிழர்களுடன் அராசங்கம் போராடுகின்றது! சஜின் வாஸ்

sajin_vassவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருப்பதாக சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டின் விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு விட்டாலும் அதன் ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றது. எங்களது அரசாங்கம் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களுடன் எதுவித தொடர்புகளையும் வைத்துக் கொள்வதில்லை.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் பயங்கரவாதிகளுடன் தொடர்பைக் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகள் வழங்கியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கூட புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களைச் சந்தித்திருந்தார்.

இன்று நம் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீனாவும், இந்தியாவும் நிதியுதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் நிதி முழுவதும் வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கே செலவழிக்கப்படுகின்றது.

நாட்டின் அபிவிருத்தி என்று வரும்போது நாங்கள் பூகோள அமைவிடம் பார்த்து முடிவுகள் எடுப்பதில்லை. எங்களைப் பொறுத்தவரை அபிவிருத்திக்கு யார் உதவியளித்தாலும் அதனைப் பெற்றுக் கொள்வோம். அது சீனாவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் சஜின் வாஸ் குணவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

TAGS: