பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில், உக்ரைன் பிரச்னை தொடர்பாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாதியில் வெளியேறினார். உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கிரிமியாவில் வசிக்கும் மக்கள் வாக்கெடுப்பு நடத்தி, தங்களது பகுதியை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, கிழக்கு உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களது நடவடிக்கைகளுக்கு ரஷ்யா மறைமுக ஆதரவு தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகள் விதித்தன. ரஷ்யாவும் பதிலுக்கு ஐரோப்பிய நாடுகளின் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர் முன்னிலையில் ரஷ்யா-உக்ரைன் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில், பிரிஸ்பன் நகரில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டில் நேற்று உக்ரைன் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. உக்ரைன் பிரச்னையில் ரஷ்யா தலையிடுவதால் பல்வேறு மேற்கத்திய நாடுகளுக்கு கடும் பொருளாதார சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுப்பதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்வர வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறினார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ‘உக்ரைன் பிரச்னையை பல்வேறு வழிகளில் திசை திருப்பும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிப்பது மிகவும் முக்கியம். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளால், அனைத்து நாடுகளிலும் பல்வேறு மோசமான விளைவுகளை உண்டாக்கும். ரஷ்யாவின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது‘ என்று பேசினார்.
இதையடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கோபத்துடன் மாநாட்டில் இருந்து வெளியேறினார். பின்னர், ஆஸ்திரேலியாவில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றுவிட்டார். இதுதொடர்பாக, அதிபர் மாளிகை வெளிட்ட அறிக்கையில், ‘மாஸ்கோவில் ரஷ்ய அதிபருக்கு பல்வேறு பணிகள் காத்து கொண்டிருக்கின்றன. அத்துடன், ஜி-20 மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதனால் தான், அதிபர் விளாடிமிர் புதின் கிளம்பி விட்டார். உக்ரைன் பிரச்னை குறித்து ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவருடன் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது உக்ரைன் பிரச்னையில் ரஷ்ய அதிபர் புதின் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பார்‘ என்று கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான குற்றச்சாட்டுக்கள்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஜீ.20 மாநாட்டில் ரஷ்யா எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
யுக்ரெயின் விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பை வெளியிட்டன.
ரஷ்யா யுக்ரெயினில் இருந்து வெளியேற வேண்டும் என்று, கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவின் செயற்பாட்டில் மாற்றம் ஏற்படாவிட்டால், மேலும் பல பொருளாதார தடைகளுக்கு முகம் கெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரன் எச்சரித்துள்ளார்.
யுக்ரெயினில் ரஷ்யா முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு, உலகத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை யுக்ரேனின் வளர்ச்சிக்கு ரஷ்யா பாடுபடுவதாக ஜனாதிபதி விளாதிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வங்கி கட்டமைப்பை சீர்குலைக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யா மீதான பொருளாதார தண்டனைத் தடைகள் அர்த்தமற்றவை எனவும் சட்டவிரோதமானவை எனவும் புடின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திட்டமிட்டதற்கு முன்னரே மாநாட்டிலிருந்து வெளியேறுவதற்கு ரஷ்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.