மலையகத் தமிழர் மத்தியிலும் இனச்சுத்திகரிப்பு: பாராளுமன்றில் சிறீதரன் எம்.பி

sritharan_mp_003மலையகத் தமிழர் மத்தியிலும் இனச்சுத்திகரிப்பு இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் தெரிவுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொஸ்லந்த, மீரியபெத்தவில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அஞ்சலியை செலுத்துகின்ற அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓரங்கட்டப்பட்டவர்களும் வறுமை நிலைக்குட்பட்டவர்களுமான மக்களே இயற்கை அனர்த்தங்களிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இடதுசாரிகளை ஆதரிப்போர் தமிழ் மக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் என்ற மூன்று வழிகளில் மலையக தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர்.

இந்த நிலைமை மலையக மக்களுக்கு மட்டுமேயன்றி உலகில் வேறு எந்த சமூகத்தினருக்கும் இருந்ததில்லை.

மேலும் மீரியபெத்த மண் சரிவினால் பலியானவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட எந்தவொரு விபரங்களும் இதுவரை முழுமையாக கண்டறியப்படவில்லை.

இங்கு ஏற்பட்ட மண்சரிவில் 200 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அத்துடன் நூற்றுக்கணக்கானோர் அகதிகளாகியுள்ளனர்.

மேற்படி சமூகத்தை இலங்கைக்கு அழைத்து வந்த பிரித்தானிய அரசாங்கம் அவர்கள் அழைத்து வரப்படுவதற்கு அனுமதியை வழங்கிய இந்திய அரசாங்கம் மற்றும் இதுவரை காலமும் கூலிகளாகவே பத்துக்கு பத்து லயன் காம்பராக்களில் வைத்திருக்க இலங்கை அரசாங்கமுமே மலையக மக்களின் இன்றைய நிலைக்கு காரணமாகும்.

பூணாகலை முகாமுக்கு சென்றிருந்த போது அங்கு செஞ்சிலுவைச் சங்கத்தினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அனைத்து விபரங்களும் சிங்கள மொழியிலேயே இருந்தன.

அதுமாத்திரமின்றி மலையகத்தில் கட்டாயக் கருத்தடைகள் இடம்பெற்று வருகின்றன. நவீன வசதிகளுடனான வீடுகள் கிடையாது. கல்வி வசதிகள் இல்லை. ஒரு இன சுத்திகரிப்பு ஒன்று இடம்பெற்று வருகிறது.

மலையக மக்களின் துன்பங்கள் மற்றும் அவல நிலைமைகள் ஆகியவற்றை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டும் ஒரு வாய்ப்பாகவே மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் இறைவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது எனலாம்.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் மூன்று தினங்களாக குளிக்காது இருந்தமையை நாம் நேரில் கண்டோம். வெளியில் சென்றால் அவர்களால் மீண்டும் முகாம்களுக்குள் நுழைய முடியாது.

யுத்தத்தின் போது வடக்கில் இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்கள் இவ்வாறுதான் செட்டிகுளம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் எமக்கும் அங்கு சென்று அந்த மக்களை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இன்றைய நவீன உலகில் மலையக மக்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம் முக்கியத்துவம் பெறுகின்றது. மீண்டும் அனர்த்தங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதே இங்குள்ள கேள்வி.

மலையக மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு காணித் துண்டு ஒன்று கிடையாது. தோட்டத் தொழிலாளர்கள் என்பதற்கு அப்பால் அவர்கள் தமிழ் மக்கள் என்ற வகையில் அவர்களுக்கான கௌரவமும் பாதுகாப்பும் அவசியமாகும். அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கைச் சூழல் ஒன்று ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இங்கு நான் மலையகத் தலைமைகளைக் குறைகூறவில்லை. அவர்களும் தங்களது முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க வடக்கில் வலிகாமம் வடக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் எமது மக்கள் இன்றும் மீள்குடியேற்றப்படாத நிலையில் இருந்து வருகின்றனர்.

இது குறித்து நாம் தொடர்ச்சியாக கூறி வருகிறோம். மஹிந்த சிந்தனை, ஆசியாவின் ஆச்சரியம் என்றெல்லாம் இங்கு கூறப்படுகிறது. ஆனாலும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர் என்றார். -http://www.tamilwin.com

TAGS: