போதைப் பொருள் கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் இன்று இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மண்டைதீவு மற்றும் குருநகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரியிருக்கின்றனர்.
இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை மீனவர்கள் பற்றி தகவல் தெரிவிக்காதிருப்பது தங்களுக்குக் கவலையளிக்கின்றது என்று தண்டனை பெற்றவர்களில் ஒருவராகிய மண்டை தீவைச் சேர்ந்த கிறிஸ்துராஜா ஹில்மட்ராஜின் மனைவி மரியபுளோரன்ஸ பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
“எனது கணவருடன் குருநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் துஷாந்தன், கமல் கிறிஸ்டி ஆகிய மூவரையுமே ஐந்து இந்திய மீனவர்களுடன் வழக்கில் தண்டனை வழங்கியிருந்தார்கள். இந்திய மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யும்போது எங்கள் கணவன்மாரையும் விடுதலை செய்யாதது ஏன்? அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் நாங்களும் தூக்கில் தொங்குவதைவிட வேறு வழி எங்களுக்கு இல்லை”, என்று மரிய புளோரன்ஸ் தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும் மூன்று வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
“இவர்களை விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்த்துத்தான் நாங்கள் கடந்த மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்குப் போயிருந்தோம். ஆனால் அவர்களுக்கு மரண தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இப்போது அவர்களுடன் தண்டனை வழங்கப்பட்ட இந்திய மீனவர்களை பொதுமன்னிப்பு என்று விடுதலை செய்துவிட்டார்கள். ஆனால் எங்கள் உறவுகளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எனக்கு ஒரு மகன் இருக்கின்றார். எனது கணவரை நம்பித்தான் நாங்கள் வாழ்கின்றோம். அவர்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியாது”, என்றும் மரிய புளோரன்ஸ் கூறினார். -BBC