கல்முனை மாநகர சபையில் தமிழர்கள் புறக்கணிப்பு! முஸ்லிம் காங்கிரஸினர் சதி!

tna_logoகல்முனையில் வாழ்கின்ற சுமார் 30000 இற்கு மேற்பட்ட தமிழர்களின் இருப்பு அபிவிருத்தி மற்றும் நலநோம்பு செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும் எனும் வன்மநோக்கத்துடன் நன்கு திட்டமிட்டு முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸினர் செயற்படுகின்றனர்.

தமிழ்ப் பிரதிநிதிகளையும், ஒட்டு மொத்த தமிழ் முஸ்லிம், மக்களையும் கவலையடைய வைத்துள்ளது என கல்முனை மாநகர சபையின் த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நால்வரும் இணைந்து விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கல்முனை மாநகரசபையில் நேற்று நிதிநிலையியல் குழு மற்றும் ஏனைய உபகுழுக்கழுக்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இடம்பெற்றது.

இக்கூட்டம் வழமைக்கு மாறான முறையில் தமிழர்களை புறம்தள்ளி நிதிக்குழுவில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்வதனூடாக கல்முனையில் வாழ்கின்ற சுமார் 30000 இற்கு மேற்பட்ட தமிழர்களின் இருப்பு அபிவிருத்தி மற்றும் நலநோம்பு செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும் எனும் ஒரு வன்மநோக்கத்துடன் நன்கு திட்டமிட்டு முதல்வர் நிசாம்காரியப்பர் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸினர் செயற்பட்டமையானது தமிழ்ப் பிரதிநிதிகளையும், தமிழ் முஸ்லிம் மக்களையும் கவலையடைய வைத்துள்ளதுடன். இனத்துவேசத்தின் உச்சநிலையாகவும் இதனை பார்க்க வேண்டியுள்ளது.

இவர்களது கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

இதுவரை காலமும் இம்மாநகரசபையில் நிதிநிலையியல் குழுவிற்கு தெரிவாகும் ஆறு உறுப்பினர்களில் தமிழர்கள் சார்பில் ஆகக்குறைந்தது ஒரு தமிழர் இடம்பெறுவது வழமை. ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் இருந்துள்ளமை வரலாறு.

ஆனால் அன்று நடைபெற்ற கூட்டத்தில், கூட்டத்தை ஆரம்பித்த உடனே வாக்கெடுபினூடக உறுப்பினர்களை தெரிவு செய்வது என முதல்வரினால் முன்மொழிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களால் ஏன் இந்த வழமைக்கு மாறான செயற்பாட்டினை செய்கிறீர்கள் எனக்கேட்ட போது, உறுப்பினர்களை தெரிவதில் உங்களுக்குள் இணக்கப்பாடு இல்லை எனக்கூறப்பட்டது.

ஆனால் அவ்வாறான நிலை இங்கு இல்லை என சுட்டிக்காட்டிய போதும் இதனை ஏற்றுக்கொள்ளாது. திட்டமிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வாக்குச்சீட்டுகளை வழங்கி இதனூடாக தங்களின் பெரும்பான்மையினால் திட்டமிட்டபடி தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை புறம்தள்ளி விட்டார்கள்.

இதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், இன நல்லுறவில் ஏற்படப்போகும் விரிசல் தொடர்பாகவும் கூறி வழமை போன்று தமிழ் பிரதிநிதித்துவம் பேணப்பட வேண்டும் என சபையில் எடுத்துரைத்த போது முதல்வர் அவர்களால் பின்வருமாறு பதில் அளிக்கப்பட்டது.

“எங்களால் கொண்டு வரப்பட்ட கரையோர மாவட்ட பிரேரனைக்கு தமிழ் பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களித்ததற்கான நடவடிக்கைதான் இது எனவும் எதிர்காலத்தில் இது தொடர்பாக ஏனைய கட்சித்தலைவர்களுடன் பேசி முடிவெடுக்கலாம்” எனவும் கூறி ஏனைய சில அறிவித்தலையும் கூறிவிட்டு எங்கள் கருத்துக்களை கூறுவற்கு இடமளியாது, அமர்வினை இடையில் முடித்து விட்டு வெளியேறிய சம்பவமானது. ஒரு ஜனநாயகமற்ற
சர்வதிகாரத் தன்மையையும் தமிழர்கள் மீதுள்ள அடக்கு முறையையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இச்செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் இச்செயற்பாடு தொடர்பாக தொடர்புடைய அனைவரும் கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என பகிரங்க அறிவித்தல் செய்கின்றோம். அத்துடன் ஏன் நாங்கள் கரையோர மாவட்ட பிரேரணையை எதிர்த்தோம் என்பதனை மிகத்தெளிவாக ஊடகங்கள் வாயிலாகவும் சபை அமர்விலும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அவமானம் ஒரு சபையினுடைய நிதிக்குழுவில் தமிழர் ஒருவரை .வர விடாமல் செய்தற்கு எத்தனை கபட நாடகங்களை நடாத்தும் இவர்களுடன் எப்படி நாம் சேர்ந்து எதிர்காலத்தில் வாழ முடியும் என்பதனை சிந்திக்க வேண்டியுள்ளது?

மேலும் ஏனைய தலைமைகளுடன் பேசும் அறுகதை இனவெறி பிடித்த முதல்வர் நிசாம் காரியப்பருக்கு இல்லை. ஏனெனில் TNA-SLMC தலைமைகளுடன் இணக்கப்பாட்டிற்கு வந்து முதல்வரிடம் கையளிக்கப்பட்ட மாநகரசபை வேலைவாய்ப்புகள், ஆட்டோ தரிப்பிட பிரச்சனை, கலாசார மண்டப அனுமதி, நூலகப் பெயர்மாற்றம், போன்ற சிறிய பிரச்சனைகளில் ஒன்று கூட இதுவரை இவரால் தீர்த்து வைக்கப்படவில்லை. இவரால் என்ன முகத்துடன் எம்தலைமைகளுடன் பேசுவது.

இதைவிட கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தலுக்கான முட்டுக்கட்டை, வீதியில் மின்விளக்கு பொருத்துவதில் பாகுபாடு, கழிவகற்றலில் பாகுபாடு, தமிழ் மக்கள் தேவைக்காக மாநகர சபைக்கான வளங்களைப் பயன்பபடுத்துவதில் பாகுபாடு என்பன இடம்பெறுகிறது.

இவ்வாறான நிலையில் SLMC ஆட்சி செய்யும் இந்த மாநகர சபையில் எமது மக்களுடைய தேவை சேவை என்பன நிறைவேற்றப்படாத படசத்தில் எந்த தீர்மானங்களுக்கும் நாம் SLMC இனருக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதுமில்லை. எங்கள் கட்சித்தலைமைகளை இனிமேலும் ஏமாற்றவும் முடியாது என்பதனை இவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழர்கள் மீதான புறக்கணிப்புகள் பாகுபாடுகள் தொடர்பாக மாநகரசபைக்கு உதவி வழங்கும் கொரிய நாட்டு ஜெய்க்கா நிறுவனம், இவரால் கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜேர்மன் நாட்டு மாநகர சபை போன்ற சகல அமைப்புகளுக்கும் ஆதார பூர்வமாக தெளிவுபடுத்தவும் தயங்கமாட்டோம்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட சகல தரப்பினரும் தமிழ்-முஸ்லிம் நல் உறவை கட்டிக்காக்க முன்வர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. -http://www.tamilwin.com

TAGS: