ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்! வன்னி மேம்பாட்டு பேரவை வேண்டுகோள்

vanni-membaddu-beravaiதமிழ் மக்களின் போராட்டங்களை பலவீனப்படுத்தியது போல தற்போது ஆளும் அரசுக்குள்ளும் அமைச்சர்களை பிரித்தெடுத்து நாட்டை பலவீனப்படுத்தும் செயற்றிட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி கவனம் செலுத்தி வருகிறது குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என வன்னி மேம்பாட்டு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பேரவை விடுத்துள்ள விசேட அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

நாட்டின் தலைவிதியையோ அல்லது ஆட்சி முறைமையையோ தீர்மானிக்க முடியாத சக்திகளாக சிறுபான்மை மக்கள் இருப்பது வருத்தமளிப்பதுடன் ஜனநாயகம் என்பதன் சர்வாதிகாரத்தை சிந்திக்கவும் வைக்கிறது.

ஆயினும் இந்த தேர்தலில் தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் பங்களிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும்.

எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுபான்மை மக்கள் உணர்ச்சிகளிற்கும் வார்த்தை ஜாலங்களுக்கும் கட்டுப்படாமல் சுய சிந்தனையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

கடந்து வந்த ஜனாதிபதி தேர்தலிகளில் தமிழ் மக்கள் ஆதரவளித்த கட்சிகளிற்கு எதிராகவே சிங்கள மக்கள் வாக்களித்து வந்துள்ளனர்.

இந் நிலைப்பாடு தமிழ் தேசியத்திற்கு நிகரான சிங்கள தேசியம் வலுவூட்டப்பட்டதனால் ஆகும்.

எனவே வருகின்ற தேர்தலில் எத்தகைய முடிவுகளை மேற்கொள்வதாக இருந்தாலும் பகுத்து ஆராய்ந்து மேற்கொள்வதே சிறந்தது ஆகும்.

ஏனெனில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்திலே தமிழ் மக்களின் போராட்டங்களை வலுவிழக்க செய்யும் செயற்பாடு மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இவ்வாறான அந்தரங்க குழிபறிப்புக்களை செய்தவர்கள் தமிழ் மக்களின் உரிமையை பெற்றுத்தருவார்கள் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

அது மாத்திரமன்றி பொது வேட்பாளர் என்ற பெயரில் முதலாளித்துவ கொள்கைகளை காப்பாற்ற நிறைவேற்று அதிகார முறைமையை ஆதரித்து வாக்களித்த ஆளும் கட்சியை சார்ந்த ஒருவரையே நிறுத்தி இருக்கிறார்கள்.

அது மாத்திரமன்றி யுத்த இறுதிக்கட்டத்தில் ஆளும் கட்சியின் அமைச்சராக இருந்து வேடிக்கை பார்த்த ஒருவரே தற்போது தமிழ் மக்களின் மீட்பர் என அறை கூவுகிறார்.

எனவே ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சிங்கள தேசியவாதிகளும் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக அறைகூவுவதும் கதிரைக்கு வந்தவுடன் ஒன்று பட்ட இலங்கைக்குள் வாழ கோருவதுமே வரலாறு கண்ட உண்மை ஆகும்.

எனவே வன்னி மேம்பாட்டு பேரவை பெயர் குறிப்பிட்டு வாக்களிக்க கோரும் எந்த செயற்பாட்டையும் ஜனாதிபதி தேர்தலில் முன்னெடுக்காது என்பதுடன் தமிழ் மக்களாகிய நீங்கள் இயல்பாக உங்களின் விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: