தாய் நாட்டுக்காக போராடி மண்ணில் விதையான ஈழத்தமிழ் இனத்தின் வீர வேங்கைகளான மாவீரர்களின் நாள் இன்று.
ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல.
தமிழீழத்தின் விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களுடன் இணைந்து போரிட்டு உயிர் தியாகம் செய்த ஏனைய போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் மாவீரர் நாளாகும்.
நவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1989ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த நாள் மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களுடன் ஒப்பிடத்தக்கது.
மாவீரர் நாளில் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் ஈழப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செய்து அஞ்சலி செலுத்துவர்.
எம் தேசத்தை காக்கப் புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என தமிழீழ புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூறப்பட்டது.
ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவதும் மதிப்பதும் தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றென விடுதலைப் புலிகள் கருதுகின்றனர்.
அந்த வகையில் மாண்ட இந்தக் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே அவர்களை உறங்க வைத்து, அவர்களுக்கு மலர் சூடி அழகு பார்த்து, அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள்
நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.
மக்கள் அனைவராலும் வணங்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்.
மாவீரர் நாளாக நவம்பர் 27ம் திகதி விடுதலைப் புலிகளால் 1989ம் ஆண்டு அறிவிக்கப்பட்டமைக்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
இந்த நாளில் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான வடமராட்சி பிரதேச கம்பர்மலை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் எனும் சத்தியநாதன் 1982ம் ஆண்டு வீரமரணம் அடைந்தார்.
இவர் உயிர் தியாகம் செய்த ஏழு ஆண்டுகளின் பின்னரே முதன் முதலில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் வீரச்சாவடைந்த சங்கர் 1982ம் ஆண்டு நவம்பர் 27 ம் திகதி மாலை 6.05க்கு வீரமரணமடைந்ததார்.
லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமாக மாறியது.
போராட்ட காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர் நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன.
அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரையும், இடம்பெற்றன.
மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
எனினும் 2009ம் ஆண்டு மே 18ம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னர் தமிழ் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் இலங்கை அரசும் அதன் படைகளும் வன்னியிலும், யாழ் மாவட்டங்களிலும், மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்து அழித்தது மாத்திரமன்றி மாவீரர்களை நினைவு கூருவதற்கும் தடையேற்படுத்தி வருகின்றனர்.
இருந்த போதிலும் மாவீரர்களை தம் மனதில் நிறுத்தி நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.
தாயகத்தில் சுதந்திரம் பறிபோன நிலையில், புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆனால் மாவீரர் துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்களை நினைவு கூருகின்றனர்.
மாவீரர் தினமான இன்று பல புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்படுகிறது.
இன்று எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களை இலங்கை அரசுக்கு பயந்து, சுதந்திர வேட்கையோடு நினைவுகூரும் நாம் எமது தாயகத்தின் சுதந்திரத்தோடு நினைவுகூரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை தமிழர்கள் சார்பாக நிலைநிறுத்தி…..
மாவீரர்கள் காலத்தால் என்றுமே அழியாதவர்கள்…இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக தமிழரின் இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள்…
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்!