கருப்பின இளைஞர் படுகொலை: அமெரிக்காவில் போராட்டத்தின் தீவிரம் தணிகிறது

  • மைக்கேல் பிரெüன் படுகொலை விவகாரத்தில் பெருநடுவர் குழுத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் காவல் துறை தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இரவு திரண்ட பொதுமக்கள். அங்கு பின்னர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தீர்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறையும் ஏற்பட்டன.
  • மைக்கேல் பிரெüன் படுகொலை விவகாரத்தில் பெருநடுவர் குழுத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் காவல் துறை தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இரவு திரண்ட பொதுமக்கள். அங்கு பின்னர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தீர்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறையும் ஏற்பட்டன.

அமெரிக்காவின் ஃபெர்குஸன் நகரில், கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற காவலர் மீது நீதிமன்ற விசாரணை தேவையில்லை என பெருநடுவர் குழு (கிராண்ட் ஜூரி) அளித்த தீர்ப்பை எதிர்த்து அங்கு திங்கள்கிழமை தொடங்கிய போராட்டங்களின் தீவிரம், புதன்கிழமை தணிந்தது.

அந்த நாட்டின் மிஸூரி மாகாணத்தைச் சேர்ந்த செயின்ட் லூயிஸின் புறநகர்ப் பகுதியான ஃபெர்குஸனில், மைக்கேல் பிரெüன் (18) என்ற கருப்பின இளைஞர், டாரென் வில்ஸன் என்ற போலீஸ் அதிகாரியால் கடந்த ஆகஸ்ட் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், காவலர் டாரென் வில்ஸன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று, இந்த சம்பவம் குறித்து பூர்வாங்க விசாரணை மேற்கொண்ட பெருநடுவர் குழு திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செயின்ட் லூயிஸ் நகரில் இரண்டு நாள்களாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைப்பு, போலீஸார் மீது கல், பாட்டில்கள், பெட்ரோல் குண்டு வீச்சு, கடைகள் சூறையாடல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. வன்முறையைக் கட்டுப்படுத்த 2,000 தேசிய காவல் படையினர் ஃபெர்குஸன் பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், போலீஸாரின் கடும் முயற்சி காரணமாக, மூன்றாவது நாளான புதன்கிழமை போராட்டங்கள் கணிசமான அளவு குறைந்திருந்தன.

அதனைத் தொடர்ந்து, இரண்டு நாள்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.

எனினும், நகரில் ஆங்காங்கே சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. செயின்ட் லூயிஸ் நகரில், பொதுப்பணித் துறை அலுவலகமான “சிட்டி ஹாலில்’ குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறைக்கு எதிராக கோஷமெழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நியூயார்க்: இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட மைக்கேல் பிரெüனின் பெற்றோர்கள், அவரைப் போலவே நிராயுதபாணியாக போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மேலும் இரு கருப்பின இளைஞர்களின் பெற்றோர்களுடன் இணைந்து, நியூயார்க் நகரிலுள்ள மனித உரிமை ஆர்வலர் ஆல் ஷார்ப்டெனின் அலுவலகத்தில் நடைபெற்ற நீதி கேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வில்ஸன் பேட்டி: மைக்கேல் பிரெüனை சுட்டுக் கொன்றதற்குப் பிறகு, முதல்முறையாக காவலர் டாரென் வில்ஸன் தொலைக்காட்சிக்கு புதன்கிழமை பேட்டியளித்தார்.

அப்போது, “”சம்பவ தினத்தன்று மைக்கேல் பிரெüனுடன் நடந்த போராட்டத்தின்போது, அவர் என்னிடமிருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்றார். எனவே, அவரைச் சுடுவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லாமல் போனது” என்று தெரிவித்தார். -http://www.dinamani.com