விடுதலைப்புலிகள் 80 பேரை கொன்று புதைத்ததாகக் கூறப்படும் இடத்தில் ஆய்வு

tigerssrilankamass

விடுதலைப்புலிகள் 80 பேரைக் கொன்று புதைத்த இடம் என்று கூறப்படும் இடத்தில் அகழாய்வு செய்யும் போலிசார்

விடுதலைப்புலிகளினால் சிறை வைக்கப்பட்டிருந்த 80 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இடம் ஒன்றை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் செவ்வாயன்று அகழ்ந்திருக்கின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பெரிய இத்திமடு என்ற இடத்திலேயே இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜிர் ரோகண தெரிவித்திருக்கின்றார்.

பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் போது நான்கு சாட்சிகள் தெரிவித்த தகவல்களின் பின்னணியில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.ஐ.வஹாப்தீன் அவர்களின் உத்தரவுக்கமைவாக இந்த அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றிருக்கின்றது.

பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரின் பொறுப்பில் இடம்பெற்ற இந்த அகழ்வின்போது அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள், சட்ட வைத்திய பிரிவினர் மற்றும் கொழும்பு ஜயவர்தனபுர, ரஜரட்ட ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தோர் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

இலங்கைக் காவல்துறை பரிசோதகர் ஜெயரத்னம், இராணுவ கேப்டன் ஒருவர் உள்ளிட்டோரும் இவ்வாறு விடுதலைப்புலிகளினால் சிறை வைக்கப்பட்டிருந்து பின்னர் கொல்லப்பட்டதாகக் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண அவர்கள் கூறினார்.

இன்றைய அகழ்வு பணிகளின்போது கொல்லப்பட்டவர்களின் உடல் எச்சங்கள் போன்ற தடயப் பொருட்கள் கிடைக்கவில்லை. ஆயினும் கொல்லப்பட்டவர்கள் எரியூட்டப்பட்டதற்கான அடையாளங்களைக் கொண்ட தடயங்களையே இராசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் சேகரித்திருப்பதாக சம்பவ இடத்திற்குச் சென்று திரும்பியுள்ள செய்தியாளர்களில் ஒருவராகிய எம்.எஸ்.எம்.பஸீர் கூறினார்.

இந்த அகழ்வு நடவடிக்கைகள் மூன்று தினங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். -BBC

TAGS: