எவ்வித சூழ்ச்சிகளுக்கும் பொது எதிரணியினர் இடமளிக்கக்கூடாது: விக்கிரமபாகு கோரிக்கை

vikramapakuமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழித்து ஜனநாயகத்தினை வென்றெடுப்பதற்கு மக்கள் பாதையில் இறங்கியுள்ளனர். இத்தருணத்தில் எவ்வித சூழ்ச்சிகளுக்கும் பொது எதிரணியினர் இடமளிக்கக்கூடாது. மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய எல்லோரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது விக்கிரமபாகு இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சர்வதிகாரம் மிக்க ஆட்சியிலிருந்து விடுபடவும் நாட்டின் இராணுவ ஆட்சியை முழுமையாக நீக்கவும் நாட்டின் ஜனநாயக்க ஆட்சிக்கு வழிவகுத்திடவே இன்று அனைத்து மக்களும் பாதைக்கு இறங்கியுள்ளனர்.

நாம் 1978 ஆம் ஆண்டிலிருந்தே நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக போராடினோம். அக்கால கட்டத்தில் எம்முடன் ஒரு சில தரப்பினரே கைகோர்த்து நின்றனர். எமது இவ்வாறான செயற்பாடுகளினால் பல்வேறு சவால்களை எதிர்நோக்கினோம். எவ்வாறான நிலைமையிலும் எமது முயற்சியை கைவிட்டது இல்லை. தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டோம்.

நாம் தேர்தலை எதிர்பார்த்து எமது செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துழைப்பை வழங்கவே பொது எதிரணிக்கு விமர்சனத்துடனான ஆதரவை வழங்குகின்றோம். எமது ஒத்துழைப்புடன் நாட்டில் விடுதலை ஏற்படுத்தவே எமது செயற்பாடு அமைந்திருக்கும்.

எனவே இந்த நாட்டின் சர்வாதிகாரத்தினை கட்டுப்படுத்தி ஜனநாயகத்தினை ஏற்படுத்தும் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய எப்போதும் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

-http://www.tamilwin.com

TAGS: