மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இருக்கும் உறவு முறை இன்னமும் சரியாக ஒழுங்கு செய்யப்படவில்லை என வடக்கு முதலமைச்சர் க.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேலும் அவர் பேசுகையில் தேர்தலின் பெறுபேறுகளைப் பாதிக்கும் வண்ணம் பேச வேண்டாம் என்று தேர்தல் ஆணையாளர் விடுத்த அறிக்கைக்கு அமைவாக நான் கூறவந்த சில விடயங்களை இத் தருணத்தில் தவிர்த்துக் கொள்கின்றேன்.
தம்மைத் தாமே தக்கவாறு பரிபாலிக்க, நிர்வகிக்க, பாதுகாக்க மாகாணம் எத்தனிக்கும் போது அதற்குத் தடையாக நடந்து கொள்வது வருங்காலத்தில் பாரிய விளைவுகளைக் கொண்டுவரக் கூடும் என்பதையே உங்களுக்கு இத்தருணத்தில் எடுத்துக் கூற விரும்புகின்றேன்.
அரசியல் காரணங்களுக்காக வடமாகாணத் தமிழ்ப் பேசும் மக்களாகிய நாம் ஒருவருடன் ஒருவர் முட்டி மோதி முரண்பட்டுக் கொள்வது எம்மை நாமே பலவீனப் படுத்துவதாகவே அமையும். முரண்பாடுகள் அரசியல் ரீதியாக இருக்க வேண்டும். ஆனால் நாம் யாவரும் எமது மக்கள் நலன் கருதியே பயணிக்கின்றோம் என்ற எண்ணம் எம் யாவருள்ளும் மேலோங்க வேண்டும்.
இணைத் தலைவர் அவர்கள் நான் பேசி முடித்தவுடன் வழக்கமாக நான் அரசியல் பேசுவதாகவும் இது பொருளாதார ரீதியான ஒருங்கிணைப்புக் கூட்டம் என்பதையும் எமக்கு நினைவுபடுத்துவார். ஆனால் நான் கூறுவது பொருளாதார ரீதியான கூட்டங்களில்க்கூட அரசியல் வேறுபாடுகளையும் வன்மங்களையும் உட்புகுத்தாதீர்கள் என்பதையே. வெறும் அரசியல் கட்சிகள் ரீதியான கண்ணோட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மக்கள் நலம் சார்பான மனோ நிலையுடன் இனி வருங் காலங்களிலேனும் நாம் பயணம் செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார். -http://www.pathivu.com