தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக்கூடிய முடிவு விரைவில்!

mavai-senathirajahதமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நிறைவு செய்யக்கூடியதாக யாருக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதியாக தெரிவிப்போம் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்களின் கருத்தறியும் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு கல்லடி, உப்போடை துளசி மண்டபத்தில் நடைபெற்றது.

வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவரும் இந்த கலந்துரையாடலானது நேற்று திருகோணமலையில் நடைபெற்றதுடன் இன்று காலை அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பகுதியில் பிற்பகல் மட்டக்களப்பிலும் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் எவ்வாறான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

குறிப்பாக தமிழ் மக்கள் இம்முறை தமது வாக்கு உரிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என இங்கு கலந்துகொண்டு பலர் கருத்து தெரிவித்தனர்.

அத்துடன் இதுவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த முடிவினையும் அறிவிக்காது தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா,

நேற்று திருகோணமலையிலும் இன்று காலை அம்பாறையிலும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற பிரதிநிதிகளிடத்திலுமிருந்து கருத்துக்களை அறிந்து கொண்டோம்.

இக்கருத்துகள் மிகவும் ஆரோக்கியமான முறையில் பரிமாறப்பட்டிருக்கின்றன. மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு தமது கருத்துகளை வெளியிட்டிருக்கின்றார்கள்.

இவையெல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் நாங்கள் தொடர்ச்சியாக விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.

இறுதியான முடிவு மிகவிரைவில் எடுக்கப்படும். மிகவிரையில் எங்களுடைய நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பதற்கு நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் இம்முறை முழுமையான வாக்குப்பதிவை மேற்கொள்வதற்கு உரிய வேலைகளை செய்யும்படி நாங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி கிடைத்த இந்த ஜனநாயக சந்தர்ப்பத்தில் தங்கள் வாக்குப்பதிவுகளை முழுமையாக செய்வதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். எங்கள் மக்களுடைய வெற்றி மிக முக்கியமானது.

எத்தனையோ துன்ப துயரங்களுக்குப் பிறகும் இதுவரையில் எந்த நன்மைகளையும் பெறாத எங்கள் மக்களுடைய உடனடிப் பிரச்சனைகளுக்காவது ஒரு தீர்வு வரவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம்.

ஆகவே நாங்கள் வெகு விரையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நிறைவு செய்யக்கூடியதாக யாருக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதிபட தெரிவிப்போம் என்றார். -http://www.tamilwin.com

TAGS: