தாலிபான்களை ஒடுக்க பாக் – ஆப்கன் ஒப்பந்தம்

ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதி நெடுக எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செய்ய பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளன.

pakistan_attack
பெஷாவர் தாக்குதல் தாலிபான்களுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது

 

இஸ்லாமாபாத்தில் இது தொடர்பாக ஆப்கானிய இராணுவத் தளபதி முகமது கரீமியும், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஷீல் ஷெரிப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இக்கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நோட்டோ நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கும் தளபதியான ஜெனரல் ஜான் கேம்பெல்லும் கலந்து கொண்டார்.

எல்லை நெடுக செயல்படும் பாகிஸ்தான் தாலிபான் அமைப்பினரை இலக்குவைத்து தாக்குவது குறித்து இனி களத்தில் இருக்கும் இராணுவக் கமாண்டர்கள் தங்களுக்குள் பேசி முடிவுசெய்வார்கள்.

பெஷாவர் நகரில், கடந்தவாரம் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 150துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில் இந்த கூட்டம் வந்துள்ளது. பெஷாவர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள்.

ஆப்கானின் குணார் பிராந்தியத்தில் தாலிபான்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மரண தண்டனை

பெஷாவர் தாக்குதலையடுத்து ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மரண தண்டனைகளை பாகிஸ்தான் நிறைவேற்ற ஆரம்பித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட தீவிரவாத வழக்குகளில் மரண தண்டனை பெற்ற 6 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

சிவிலியன் நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் கருணை மனுக்களை அந்நாட்டு ஜனாதிபதி நிராகரித்துவிட்டார்.

தாலிபான்களின் பதுங்கு இடங்கள் மீதான வான் தாக்குதல்களையும் பாகிஸ்தான் விமானப்படை அதிகரித்துள்ளது. -BBC