பிரெஞ்சு காவல்துறையினர்
பிரான்ஸில் கடந்த மூன்று நாட்களில் நடந்த மூன்று வெவ்வேறு வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதாக பிரஞ்சு அரசு அறிவித்திருக்கிறது.
பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்று பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் அச்சம் வெளியிட்டிருக்கிறார்.
பிரான்ஸின் தெருக்களில் அதிகரித்த காவலர் ரோந்துப்பணிகளில் ஈடுபடுத்தபடுவார்கள் என்றும் வால்ஸ் அறிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் கூடுதலாக 300 ராணுவத்தினர் நாடு தழுவிய அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள்.
வணிகப் பிரதேசங்கள், வர்த்தக வளாகங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட போக்குவரத்து கட்டமைப்பின் கேந்திர இடங்களில் எல்லாம் இந்த அதிகரித்த ரோந்துப்பணியில் காவலர்களும் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அரசுதரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் நடந்த சமீபத்திய தாக்குதல்களில் ஈடுபட்ட இரண்டு தாக்குதல்தாரிகள் இஸ்லாமிய ஆதரவு கோஷங்களை எழுப்பினார்கள். நேந்தெஸில் திங்களன்று நடந்த தாக்குதலில் காயமடைந்த பத்துபேரில் ஒருவர் செவ்வாய்க்கிழமை தனது மருத்துவமனையில் மரணமடைந்தார். -BBC
ஜெர்மனி: இஸ்லாத்துக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஜெர்மனிய நகரான ட்ரெஸ்டனில், இஸ்லாமுக்கு எதிராக நடந்த பேரணியில் சுமார் 17,500 பேர் கலந்துக்கொண்டதாக உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேரணியில் கலந்துக்கொண்ட போராட்டக்காரர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுவதிலும், குடிவரவு மற்றும் புகலிடம் கோருவோர் பற்றிய உரைகளை கேட்பதிலும் ஈடுப்பட்டனர்.
‘ஐரோப்பா இஸ்லாமிய மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேசப்பற்று மிக்க ஐரோப்பியர்கள்’ அல்லது பெகிடா என்றழைக்கப்படும் இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள், கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரந்தோரும் இஸ்லாம் மதத்திற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெர்மனியில் குடியேரும் இஸ்லாமியர்களால் ஜெர்மனிய மக்களின் இயல்பு வாழ்க்கை அச்சுறுத்தலுக்குள்ளாகிறது என்றும், இஸ்லாம் அமைதியான மதம் அல்ல என்றும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
தாங்கள் கிறிஸ்தவ மதத்தை பாதுகாப்பதாக இந்த போராட்டக்காரர்கள் தெரிவித்தாலும், அவர்கள் வலதுசாரி தீவிரவாதத்தை வளர்ப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பெகிடாவின் இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியில் தஞ்சம் கோரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் இந்த ஆண்டில் மட்டும் சிரியா, இராக், அப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் இரண்டு லட்சம் பேர் தஞ்ச கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த பெகிடாவுக்கு எதிரான போராட்டங்களும் திங்களன்று நடைபெற்றன.
வெளிநாடுகளிலிருந்து வரும் மக்களை ஒதுக்காமல் அவர்களை வரவேற்க வேண்டும் என்ற பேரணி மியுனிக் நகரில் நடைபெற்றது. -BBC