பெஷாவர் தாக்குதலைத் திட்டமிட்டவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்தியுள்ளத் தாக்குதல்களில், திவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

drone
ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்புகள் உள்ளன.

 

இதில் முதல் தாக்குதல் வடக்கு வாசிரிஸ்தான் பகுதியிலுள்ள குண்ட் கிராமத்திலுள்ள பஞ்சாபித் தாலிபான்கள் இருந்த வளாகத்தின் மீது நடத்தப்பட்டது.

அதில் நால்வர் கொல்லப்பட்டனர். பின்னர் அதே பகுதியில் உஸ்பெக் தீவிரவாதிகள் தங்கியிருந்த ஒரு வளாகத்தின் மீது நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.

இதனிடையே கைபர் மாகாணத்தின், பாராப் பிராந்தியத்தில், தமது படைகளும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

இதில் இந்த மாதம் பெஷாவரிலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைத் திட்டமிட்டவர் என்று சந்தேகிக்கப்படுபவரும் துப்பாக்கிச் சூட்டுச் சண்டையில் கொல்லப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். -BBC

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தொடர்புடைய 6,000 பேர் கைதாகிறார்கள்

தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6,777 பேரைக் கைது செய்யும்படி பாகிஸ்தானின் பல்வேறு மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜியோ நியூஸ் எனும் தொலைக்காட்சி இது தொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்த விவரம்:

பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்பாக, கைபர் பக்துன்கவா, சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப் ஆகிய மாகாண அரசுகளுக்கு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் ஓர் அறிவுறுத்தல் அளித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ள 6,777 பேரை உடனடியாக கைது செய்ய அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைபர் பக்துன்கவா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

சுமார் ஆயிரம் பேர் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 1,416 பேர். மேலும், பலுசிஸ்தானைச் சேர்ந்த 338 பேர், தலைநகர் இஸ்லாமாபாதைச் சேர்ந்த 23 பேரைக் கைது செய்ய பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெஷாவர் பள்ளித் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

-http://www.dinamani.com