லிபியாவில் எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்: 19 வீரர்கள் பலி

libya_militiaலிபியாவில், எண்ணெய் கிடங்கு ஒன்றைக் கைப்பற்றும் முயற்சியில் போட்டி ஆயுதக் குழுவினர் வியாழக்கிழமை நிகழ்த்திய அதிரடித் தாக்குதலில், ராணுவ வீரர்கள் 19 பேர் உயிரிழந்தனர்.

எனினும், எண்ணெய் கிடங்கைக் கைப்பற்றும் ஆயுதக் குழுவினரின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

அல்-சிட்ரா துறைமுகத்திலுள்ள எண்ணெய் கிடங்கைக் கைப்பற்றுவதற்காக, ஃபஜர் லிபியா அமைப்பினர் விசைப் படகுகளில் வந்து சிறு ஏவுகணைகளைத் கொண்டு தாக்குதல் நிகழ்த்தினர்.

அதில் ஒரு ஏவுகணை, எண்ணெய் வைக்கப்பட்டிருந்த தொட்டி ஒன்றைத் தாக்கியதில், அந்தத் தொட்டி தீ பற்றியது.

ராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் மூன்று விசைப் படகுகள் அழிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஃபஜர் லிபியா அமைப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தச் சண்டையில் 19 வீரர்கள் உயரிழந்தனர்.

ஃபஜர் லிபியா தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல் இல்லை என்று தெரிவித்தார்.

லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் கடாஃபியை, நேடோ ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பதவியிலிருந்து அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஆயுதக் குழுக்களும் அதிகாரத்துக்காக தங்களிடையே சண்டையிட்டு வருகின்றன.

சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தற்போதைய அதிபர் அப்துல்லா-தனிக்கு எதிராகப் போராடி வரும் ஃபஜர் லிபியா அமைப்பு, தலைநகர் திரிபோலி உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றி போட்டி நாடாளுமன்றம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

-http://www.dinamani.com