சொமாலியாவில் கென்யாவுடனான எல்லையருகிலுள்ள ஒரு ஊரில் இஸ்லாமியவாத ஆயுதக் குழுவான அல்ஷபாப்பின் மூத்த உறுப்பினர் ஒருவரைப் பிடித்துள்ளதாக சொமாலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
துப்பு தகவல் ஒன்று கிடைத்ததை வைத்து சொமாலியப் படைகள் தேடியதில் ஸகாரியா இஸ்மாயில் அகமது ஹெர்சி என்பவர் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என கீடோ பகுதியில் உள்ள எல் வக் என்ற மாவட்டத்தின் ஆணையர் பிபிசி சொமாலி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
ஹெர்சி பதுங்கியுள்ள இடம் பற்றி தகவல் தருபவருக்கு முப்பது லட்சம் டாலர் சன்மானம் வழங்கப்படுமென அமெரிக்க அரசாங்கம் 2012ல் அறிவித்திருந்தது.
ஆப்பிரிக்க ஒன்றிய படைகளும் சொமாலிய அரசாங்கத்துக்கு விசுவாசமான படைகளும் சேர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்திவர சொமாலியாவின் பல ஊர்களிலிருந்து அல்ஷபாப் பின்வாங்கி வருகிறது. -BBC