பாகிஸ்தானின் கிழக்குப்பிரதேசத்தில் அந்நாட்டின் சிறுபான்மையினமான அஹ்மதியா இஸ்லாமிய மதப்பிரிவைச் சேர்ந்த ஒருவரை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்றிருக்கிறார்.
குஜ்ரன்வாலா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்த நபரை அந்த துப்பாக்கிதாரி தலையில் சுட்டுக்கொன்றதாக அஹ்மதியா மதப்பிரிவின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நபரோடு சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் அஹ்மதியா இஸ்லாமிய மதப்பிரிவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கும் காலைநேர தொலைக்காட்சி பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய இஸ்லாமிய பிரச்சாரகர் ஒருவர் அஹ்மதி பிரிவினருக்கு எதிராக கருத்துத் தெரிவித்த சிலநாட்களுக்குள் தற்போதைய கொலைச்சம்பவம் நடந்திருக்கிறது.
அஹ்மதி பிரிவினர் தங்களை முஸ்லீம்கள் என்றே கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று 1974 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு அறிவித்துவிட்டது.
அப்போது முதலே அஹ்மதியாக்கள் முஸ்லீம் தலைவர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு வருவதோடு அவர்கள் மதநிந்தனை செய்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறார்கள். -BBC