ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த தனி முஸ்லிம்மாவட்டக் கோரிக்கையை நிராகரித்ததற்காவது எமது தமிழ்மக்கள் குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்மக்களை நட்டாற்றில் சிக்கவைக்கும் அக்கோரிக்கையை நிராகரித்தமைக்கு அம்பாறை மாவட்டம் வாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள். அந்த நன்றிக்கடனை எதிர்வரும் 8 ஆம் திகதி தேர்தலில் காட்டுங்கள்.
இவ்வாறு பொத்துவில் தொகுதி இணைப்பாளரும் அமைச்சர் தயாரத்னாவின் இணைப்பாளருமான பொறியியலாளர் வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி நேற்று தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து மாறியமைக்கு தனிமாவட்டக்கோரிக்கைதான் காரணமென்று தெரியவந்ததையடுத்து அவர் கருத்து வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்:
அம்பாறை மாவட்ட கரையோர நிருவாக மாவட்டக்கோரிக்கையை அங்கீகரிக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேரம்பேசியுள்ளது. அமைச்சர் றவூப் ஹக்கீம் அமைச்சரவைக்கு நகல்பத்திரம்கூட சமர்ப்பித்திருந்தார்.
அதிஸ்டவசமாக சகலஇனமக்களையும் நேசிக்கும் ஜனாதிபதி அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. இம்மாவட்டத்தினுள் தமிழ்மக்களின் எல்லைகள் நீதியாக நிர்ணயிக்கப்பட்டு அவர்களது அபிலாசைகள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அச்சப்படாமல் வாழும் சூழல் உருவாக்கப்படுமா? என்ற நியாயமான அச்சமிருந்தது.
வழமைக்குமாறாக இம்முறை எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் அனைவரும் வாக்களிப்பில் 100 வீதம் கலந்துகொள்ளவேண்டும். ஆனால் அவ்வாக்குகள் யாரைச்சென்றடையவேண்டும் என்பதில் தமிழர்கள் கவனமாயிருக்கவேண்டும். வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டும் விலைபோகமுடியாது.
அம்பாறை மாவட்டத்தைப்பொறுத்தவரையில் இன்று ஸ்ரீல.மு.காங்கிரஸ் தேர்தல் பேரமாக தனி நிருவாக மாவட்ட அலகைக் கேட்டுள்ளது. இது பற்றி நீங்கள் அறிவீர்களா? அந்த அலகிற்குள் தமிழர்களது நிலை எப்படியிருக்கும் என்பது பற்றியலெ;லாம் சிந்தித்தீர்களா? உணர்ச்சிகளைத் தட்டிவிட்டு விளையாடுபவர்கள் இது பற்றிச்சிந்திக்கமாட்டார்கள்.அவர்களுக்கு அது தேவையுமில்லை. வாக்குகளை மட்டுமே எதிர்பார்ப்பார்கள்.
1983களின் பின்னர் வந்த முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியைப் பாருங்கள். அதையிட்டு பெருமைப்படவேண்டும். அதுதான் அவர்களது அரசியல்பலம்.
இன்றுகூட அவர்களது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லையென்றதும் மறுகணம் எதிரணிக்குத் தாவியுள்ளனர். பாருங்கள் அவர்களதுஅரசியல் சாணக்கியத்தை. எம்மவர்கள் இன்னும் மதில்மேல் பூனைகள்தான்.
எனவே அம்பாறை மாவட்ட தமிழ் மக்களாகிய நீங்கள்தான் சிந்திக்கவேண்டும். உங்களது எதிர்கால இருப்புக் கேள்விக்குறியாக முன்னர் விழிப்படையவேண்டும்.
கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டபிற்பாடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தனி மாவட்டக்கோரிக்கையென்பது தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவரும் கோரிக்கையாகும்.
ஆனால் இம்முறை ஜனாதிபதித்தேர்தலின் களநிலைமை சற்று வித்தியாசம். அப்படியிருந்தபோதிலும் எமது ஜனாதிபதி அதற்கு இடம்கொடுக்கவில்லையென்பது சற்றுசந்தோசமாகவுள்ள்து. எம்மிடையேவேறுபாடுகள் இருக்கலாம். குரோதங்களிருக்கலாம். ஆனால் அவையிட்டு அலட்டிக்கொள்ள இது தருணமல்ல.
அனைவரும் இணைந்து பேசி எமது உரிமைகளை அபிலாசைகளை நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்கவேண்டும்.ஜனாதிபதியை ஆதரித்தால் எமது மண்ணை மேலும் வளப்படுத்தமுடியும். அபிவிருத்தி செய்ய முடியும். என்றார்.
(காரைதீவு நிருபர்)
-http://www.tamilcnnlk.com