இலங்கைவாழ் தமிழ்மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவிற்கே வாக்களிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இவ்வாறு காரைதீவில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிக்கும் ஜ.தே.கட்சி தேர்தல் பிரசார அலுவலகத்தைத் திறந்து வைத்து கருத்துரைத்த காரைதீவுப்பிரதேச தேர்தல் இணைப்பாளரும் முன்னாள் ஜ.தே.கட்சியின் நிந்தவூர் பிரதேசசபை உறுப்பினருமான பி.ரி.தர்மலிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில்:
நான் கடந்த 27வருடங்களாக ஜ.தே.கட்சியிலேயே இருந்துவருகின்றேன். தீவிர ஆதரவாளனாகவும் இருந்துள்ளேன். பிரதேசசபை உறுப்பினராகவிருந்து முடியுமான சேவையைச் செய்துள்ளேன்.
ஜ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகேயின் வழிகாட்டலில் முன்னாள் எம்.பி. கலப்பதி மற்றும் தயாகமகேயின் செயலாளர் வணிகசூரிய ஆகியோர்வந்து கேட்டுக்கொண்டதற்கிணங்க பொது எதிரணிவேட்பாளர் மைத்ரிக்கு ஆதரவாக பிரசாரம்செய்ய தீர்மானித்தேன்.
எனவே நான்பிரதிநிதித்துவப்படுததும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் அனைவரும் வாக்களிப்பில் பங்கேற்கவேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோளாகும். நாம் ஒவ்வொருவரும் வாக்களிப்பதற்கு தயாராகவேண்டும்.எனவே யார் ஆண்டாலென்ன என்ற பாணியில் அலட்சியமாகவோ அல்லது பகிஸ்கரிப்பிலோ ஈடுபடவேண்டாம் என மன்றாட்டமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.இம்முறை ஜனாதிபதிதேர்தல் முன்னொருபோதுமில்லாதவகையில் புதிய பரிமாணத்தை எடுத்திருக்கிறது.எமது ஆதரவு பெற்றவர்களே ஜனாதிபதியாக வரக்கூடிய களநிலை இருக்கிறது.
அம்பாறை மாவட்ட தமிழர்கள் எதிரிகளாலும் நம்மவர்களினாலும் பல வகைகளில் கடந்தகாலங்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனை ஜனாதிபதியோ அரசாங்கமோ அல்லது அதில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
இது தொடர்பில் தமிழ்மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.அவர்களுக்கு தக்கபாடத்தை இறைவன் காண்பித்துக் கொண்டிருக்கிறான்.
எனவே இத்தேர்தலை நாம் பயன்படுத்தி உரிய பலத்துடன் பயனடையமுற்படவேண்டும்.கிராமம்
கிராமமாக சென்று மக்களிடம் இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த கூட்டங்களை உள்ளுர்தலைவர்கள் கூட்டிவருகின்றனர்.
எனக்கு உதவியாக காரைதீவின் பிரபல சமுகசேவையாளர் கே.ஜெயசிறிலின் ஆதரவையும் கோரியிருக்கிறேன். அவரும் உதவுவதாகக்கூறியிருக்கிறார். வரும் நாட்களில் அவரோடு இணைந்து பிரசாரச்செயற்பாடுகளில் ஈடுபடவிருக்கிறேன் என்றார்.
-http://www.tamilcnnlk.com



























