சிரியாவில் நடந்து வரும் மோதல்களில் கடந்த ஆண்டில் மாத்திரம் 76, 000 பேர் கொல்லப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
சிரியாவில் உள்நாட்டுப் போர் 2011 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து இந்த அளவுக்கு உயிரிழப்பு வேறு எந்த ஆண்டிலும் ஏற்பட்டதில்லை.
கொல்லப்பட்டவர்களில் கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று பிரிட்டனில் செயல்படும் அமைப்பான, சிரியாவின் மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட பிறர், அரசப் படைகளையும், ஜிகாதி அமைப்புக்களையும், தீவிரவாத அமைப்புக்களையும் சேர்ந்தவர்கள்.
அரசாங்க எதிர்ப்பு போராட்டமாக சிரியாவில் ஆரம்பித்த விடயம் சிறிது காலத்திலேயே உள்நாட்டுப் போராக மாறியது. இப்போரில் இதுவரை இரண்டு லட்சம் பேர் இறந்துவிட்டனர். தொடர்ந்து நடக்கும் வன்செயல்களால் பலர் தம்முடைய வீடுகளை இழந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர்.
இருதரப்பும் மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை மேற்கத்திய நாடுகள் முதலில் ஆதரித்தன. ஆனால் அக் குழுக்கள் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்த பிறகு, அத்தகைய உதவிகளை மேற்கத்திய நாடுகள் நிறுத்திவிட்டன.
சிரியாவின் பல பகுதிகளை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். -BBC