தென்கொரியாவுடன் பேச வடகொரியா விருப்பம்

kim_jong_un
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

 

வடகொரியத்தலைவர் கிம் ஜாங் உன் தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் அரச தொலைக்காட்சியில் ஆற்றிய புத்தாண்டு உரையில் இந்த அறிவிப்பை செய்திருக்கிறார்.

வடகொரியாவின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் தென்கொரியாவின் அதிபர் பார்க் கொய்ன் ஹையுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக கிம் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த திங்களன்று வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற தனது விருப்பத்தை தென்கொரியா வெளியிட்டிருந்தது.

கொரிய யுத்தத்தால் பிளவுபடுத்தப்பட்டிருக்கும் குடும்பங்களைச் சேர்த்து வைப்பது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச தாம் தயாராக இருப்பதாகவும் தென் கொரியா அப்போது தெரிவித்திருந்தது.

அதற்கு பதிலளிக்கும் விதகமாக பேசியிருக்கும் கிம், தற்போது நிலவும் சூழல் மற்றும் மனப்பான்மைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இரு கொரியாக்களுக்கும் இடையில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தாமல் இருப்பதற்கான காரணங்கள் எவையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் சமீப மாதங்களில் இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையில் அதிகரித்துள்ள முறுகல் நிலைமைக்கு மத்தியில் இரு கொரியநாட்டு அதிபர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடப்பது எவ்வளவுதூரம் சாத்தியப்படும் என்று தெளிவாகத்தெரியவில்லை என்கிறார் சியோலில் இருக்கும் பிபிசியின் கெவின் கிம்.

கடைசியாக இருநாடுகளுக்கும் இடையிலான முறையான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றன.

அதன் விளைவாக 1950-53 ஆம் ஆண்டுகளில் நடந்த கொரிய போரினால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருந்த பல குடும்பங்கள் அபூர்வமாக ஒன்று சேர்ந்தன.

அதன் தொடர்ச்சியாக 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடக்கவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

வடகொரிய அரசுக்கு எதிராக பலூன்கள் மூலம் தென்கொரியாவில் இருந்து அனுப்பப்படும் பிரச்சார துண்டறிக்கைகளை நிறுத்துவதற்கு தென்கொரிய அரசு போதுமான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று வடகொரியா குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து அக்டோபர் மாத பேச்சுவார்த்தைகள் நின்றுபோயின.

தென்கொரியாவின் சமாதான முன்னெடுப்புக்கள் அனைத்தும் தன்னை அரவணைத்து ஆக்கிரமிப்பதற்கான முயற்சியாக வடகொரியா கருதுகிறது. அந்த சந்தேகமே இருநாட்டு உறவில் தொடர்ந்து நிலவும் முறுகல் நிலைக்கான காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. -BBC