வட கொரியா மீது புதிய பொருளாதாரத் தடை

north_korea_flag_001சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது இணையதளத் தாக்குதல் தொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படும் வட கொரியா மீது, அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

இதற்கான உத்தரவில் அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.

அந்த உத்தரவின்படி, வட கொரியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மீதும், 10 நபர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவை சீண்டும் வகையிலும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வட கொரியா செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, அண்மையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது அந்த நாடு நிகழ்த்திய இணையதளத் தாக்குதல் மிகவும் அழிவுகரமானது ஆகும்.

அதற்குப் பதிலடியாக, அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனத்துக்கு வட கொரியா பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதையும், கலைஞர்கள் அச்சுறுத்தப்படுவதையும் அமெரிக்கா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார் அவர்.

வட கொரிய அதிபரைக் கொல்ல நடைபெறும் கற்பனை சதித் திட்டத்தை கருவாகக் கொண்டு “தி இன்டர்வியூ’ என்ற திரைப்படத்தை சோனி பிக்கசர்ஸ் தயாரித்தது.

இதற்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மின் தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் மூலம் மர்ம நபர்கள் சிலர் ஊடுருவி, அதிலிருந்த ரகசிய தகவல்களை வெளியிட்டனர்.

இதற்கு வட கொரியாவே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

-http://www.dinamani.com