உலகளவில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி

அமெரிக்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றின் விலை 50 டாலர்களுக்கும் கீழ் வீழ்ந்துள்ளது.

petrol1
கடந்த ஆறு மாதங்களில் விலை பாதி அளவு குறைந்துள்ளது.

 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெ விலை வேகமாக குறைந்து வருவதையே இந்த விலைவீழ்ச்சி காட்டுகிறது.

அதேபோல் சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலையை நிர்ணயிக்கும் மற்றொரு குறியீடான ‘பிரெண்ட் க்ரூட்’ விலையும் ஒரு பீப்பாய்க்கு 6 % வீழ்ச்சியடைந்து 53 டாலர்கள் எனும் அளவில் திங்கட்கிழமை இருந்தது.

கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்ததை விட இப்போது கச்சா எண்ணெய் விலை பாதியளவுக்கு குறைந்துள்ளது.

petrol2
உற்பத்தியைக் குறைக்க ஒபெக் அமைப்பு மறுப்பு

 

சர்வதேச அளவில் கச்சா எண்ணைய் உற்பத்தி ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளதும், தேவைகள் குறைந்துள்ளதும் கச்சா எண்ணெய் விலையை மேலும் குறைக்கும் என்ற கவலைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

அண்மையில் அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்திருந்தாலும் அது ஃபிராக்கிங் எனும் முறையின் மூலமே வந்துள்ளது.

அதாவது நிலத்துக்குள் திரவங்களைப் பாய்ச்சி மண்ணுடன் இருக்கும் பாறை இடுக்கில் தேங்கியுள்ள எண்ணெயை எடுக்கும் முறை, அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

petrol3
பென்சில்வேனியாவில் புதிய முறையில் எண்ணெய் எடுக்கும் முயற்சிகள்

 

இதன் காரணமாக வடக்கு டக்கோட்டா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதேவேளை சீனா முதல் ஐரோப்பா வரையிலுள்ள கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் தமது உற்பத்தியை குறைத்து வருகின்றன.

அதேபோல எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு தற்போது இருக்கும் அளவிலேயே எண்ணெய்யை தொடர்ந்து எடுப்பது என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளமையும் முதலீட்டாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

கடந்த பல மாதங்களாகவே உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. -BBC