மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு

maithiri_ranil_001பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும்.

இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதியின் சத்தியப்பிரமாண நிகழ்வு, கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மதகுருமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

மைத்திரிக்கு மஹிந்த தொலைபேசியில் வாழ்த்து

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியே தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மைத்திரி இன்று ஜனாதிபதியாக பதவியேற்பார்

பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொது எதிரணியில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மகிந்தவை விட முன்னிலையில் இருந்து வருகிறார்.

அநேகமாக வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு விட்டதாகவும் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னமும் முழுமையாக வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பில் முன்னணி வகிக்கின்றார்.

இதன் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை பெரும்பாலும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை மைத்திரிபால பதவிப் பிரமாணம்

இன்று மாலை சதந்திர சதுக்கத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

இலங்கை சோசலிச ஜனநாயகக் குடியரசின் ஏழாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 6.00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

பதவிப் பிரமாண நிகழ்விற்கான ஏற்பாடுகள் சுதந்திர சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

சுதந்திர சதுக்கத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவையின் பின் யாரும் யாரையும் பழிவாங்க வேண்டாம்: ரணில் விக்ரமசிங்க

யாரும் யாரையும் பழிவாங்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொது மக்களிடம் கோரியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திபபில் பங்கேற்ற போது ரணில் விக்ரமசிங்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

போரை வென்றெடுத்த ஜனாதிபதி என்ற வகையில் மஹிந்த ராஜபக்சவை மதிக்கின்றோம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸ் மா அதிபர் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

தற்போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றியீட்டியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தேன். ஜனாதிபதி பொறுப்பினை ஒப்படைப்பதாக அவர் தெரிவித்தார்.

போரை முடிவுக்குக்கொண்டு வந்த ஜனாதிபதி என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ச வரலாற்றில் இடம்பிடிப்பார். மக்கள் மாற்றமொன்றை விரும்பியிருந்தனர். நல்லாட்சியை ஏற்படுத்த ஜனநாயகத்தை நிலைநாட்ட மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளது.

எவரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. யாரையும் யாரும் பழிவாங்க இடமளிக்க முடியாது. 100 வீதம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோருகின்றோம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: