நைஜிரியாவின் வட கிழக்கேயுள்ள மைதுகுரி நகரில், சனசந்தடி மிக்க சந்தைப் பகுதியில் 10 வயது சிறுமியின் உடலில் கட்டிவிடப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
தாக்குதல் நடந்த சந்தைப் பகுதி
சந்தையில் கோழிகள் விற்கப்படும் பகுதிக்கு அருகே தன் உடலில் கட்டியிருந்த குண்டை அந்தச் சிறுமி வெடிக்கச் செய்ததாக போர்னியோ மாநில காவல்துறை அதிகாரி கிடியோன் ஜிப்ரின் கூறியுள்ளார்.
இந்த சந்தை மீது கடந்த ஆண்டில் ஒரே வாரத்தில் பெண் தற்கொலை குண்டுதாரிகள் இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை. எனினும் போகோ ஹராம் குழுவினர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போகோ ஹராம் அமைப்பு சமீப வாரங்களாக நைஜிரியாவின் பல பகுதிகளில் குண்டுத் தாக்குதல்களையும், துப்பாக்கித் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.
பாகா என்ற நகரை போகோ ஹராம் பிடித்துள்ளது என்றும் அங்கிருந்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வரும் நிலையில், பல ஆயிரம் பேர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர். -BBC