பிரென்சு தேசத்தின் வரலாற்றில் ஒர் உணர்வுபூர்வமான பதிவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றிருந்த ஒன்றுகூடலின் உச்சமாக தலைநகர் பரிசில் ஒற்றுமைக்கான பேரணியில் 7இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்துள்ளனர்.
பிரென்சு அரச தலைவர் பிரான்சுவா ஓலன்ந் தலைமையில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்கல் உட்பட பல ஐரோப்பிய உலகத் தலைவர்கள் பலரும் பங்கெடுத்திருந்த இந்தப் பேரணியில் பிரான்சின் பிரதான கட்சிகளும் கூட்டாக நடைபோட்டிருந்தன.
தமிழ்மக்கள் அனைவரும் பங்கெடுத்து பிரென்சு தேசத்துக்கான தோழமையினை வெளிப்படுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏலவே அறைகூவல் விடுத்திருந்தது. நான் தமிழன், நானும் சார்லி என தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தியிருக்க அனைத்தின மக்களும் தங்கள் தங்கள் அடையாளங்களுடன் வலம்வந்திருந்தனர்.
பரிசின் பொதுப்போக்குவரத்துகள் கட்டமற்ற பாவனைக்கு திறந்து விடப்பட்டிருந்ததோடு பேரணி இடம்பெற்றிருந்த பிரதான பகுதியினைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட மெட்ரோ தொடரூந்து நிலையங்கள் பாதுகாப்பு காரணங்களுக்கான பூட்டப்பட்டிருந்தன.
8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டிருந்ததோடு குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு தொலைபேசிகளுக்கான அலைவரிசையும் துண்டிக்கப்பட்டது.
பயங்கரவாத தாக்குதலுக்கு பலியாகிய ஊடகவியலாளர்களை நினைவிருத்தி கருத்துச்சுதந்திரத்தின் குறியீடாக பலரும் எழுத்தாணி வடிவங்களை பேரணியெங்கும் தாங்கி வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com