இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து மதப் பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸிலிருந்து வெளியாகும் “சார்லி ஹெப்டோ’ வார இதழ், இஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு மதங்கள் குறித்த கேலிச் சித்திரங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தது.
இந்த நிலையில், இம்மாதம் 7-ஆம் தேதி பாரிஸிலுள்ள அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்குள் இரு பயங்கரவாதிகள் நுழைந்து அங்கிருந்த ஆசிரியர் குழுவினர், ஊழியர்கள், போலீஸார் உள்ளிட்ட 12 பேரை சுட்டுக் கொன்றனர்.
முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோவில் வெளியான கேலிச் சித்திரங்களுக்குப் பழி வாங்கும் வகையில் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக பயங்கரவாதிகள் அப்போது கூச்சலிட்டனர்.
இந்தத் தாக்குதலையும், அதனைத் தொடர்ந்து மற்றொரு பயங்கரவாதி நிகழ்த்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதையும் கண்டித்து ஐரோப்பிய நாடுகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன.
பிரான்ஸ் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்த நிலையில், தாக்குதலுக்குப் பின்பு வெளிவந்த சார்லி ஹெப்டோ பத்திரிகையில் மீண்டும் முகமது நபி இடம் பெறும் கேலிச் சித்திரம் வெளியானது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் கண்டனத்துக்குள்ளானது.
பல்வேறு முஸ்லிம் நாடுகளில் சார்லி ஹெப்டோ பத்திரிகைக்கும், பிரான்ஸ் நாட்டுக்கும் எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்தச் சூழலில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களையும், அரபு லீக் அமைப்பின் தலைவர் நபில் அல்-அரபியையும் ஐரோப்பிய யூனியன் வெளிவிவகாரக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் ஃபெடரிகா மோகேரினி, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் திங்கள்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
பயங்கரவாதத்தை வேரறுப்பதில், ஐரோப்பிய நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பிட்ட நாடுகளுடன் ஒருங்கிணைந்து, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான செயல்திட்டங்களை இன்னும் சில வாரங்களுக்குள் வகுக்க முடிவு செய்துள்ளோம்.
இதன்படி, துருக்கி, எகிப்து, யேமன், அல்ஜீரியா, வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுடன், உளவுத் தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
முஸ்லிம் நாடுகளிலுள்ள தூதரகங்களில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
மத அடிப்படைவாத பிரசாரங்களை சமாளிக்க, அரபு மொழிப் பயன்பாடு அதிகரிக்கப்படும் என்றார் ஃபெடரிகா மோகேரினி.
அரபு லீக் தலைவர் அல்-அரபி கூறியதாவது:
உலகின் ஒவ்வொரு நாடும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் ராணுவ ரீதியிலான பிரச்னை மட்டுமல்ல.
சித்தாந்தம், கலாசாரம், ஊடகங்கள், மத நம்பிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் பயங்கரவாதத்துக்கு அடிப்படையாக உள்ளன.
அதனை உணர்ந்து இந்தப் பிரச்னையை அணுக வேண்டும் என்றார் அல்-அரபி.
-http://www.dinamani.com
நல்ல முயற்சி. நம்பிக்கை இல்லை என்றாலும் நம்புவோம் நல்லது நடக்க!