டாங்க் உள்ளிட்ட வாகனங்களோடு ரஷ்ய வீரர்களும் கலகக்காரர்களுடன் இணைந்து போரிடுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் போரிட்டுக் கொண்டிருக்கும் ரஷ்ய – ஆதரவு கலகக் குழுவினர் உக்ரைன் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவிரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
டோனெட்ஸ்க் பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
போர் நிறுத்தத்திற்கான எந்த முயற்சிகளையும் தங்கள் தரப்பினர் மேற்கொள்ளப் போவதில்லை என அக்கலகக் குழுவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸாகர்சென்கோ கூறியுள்ளதாக நொவாஸ்டி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள், இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவர கோரிக்கைவிடுத்துள்ளன.
வியாழக்கிழமையன்று உக்ரைனின் அரசுப் படைகள் டோனெட்ஸ்க்கின் விமான நிலைய பிரதான டெர்மினலில் இருந்து பின்வாங்கின. கடந்த சில வாரங்களாக இங்குதான் கடும் சண்டை நடைபெற்று வந்தது.
விமான நிலையத்தின் சில பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என அரசு தெரிவித்திருக்கிறது. தற்போது நடைபெற்ற சண்டையில் 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து, தன் கனரக ஆயுதங்களோடு ரஷ்ய ராணுவமும் போரிடுகிறது என உக்ரைன் அரசும் அதற்குத் தோழமையான மேற்கத்திய நாடுகளும் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷ்யாவைச் சேர்ந்த தன்னார்வலர்கள்தான் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்துகொண்டிருப்பதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் அரசு டோனெட்ஸ்க் மற்றும் ஹோர்லிவ்கா பகுதிகளின் மீது நடத்திய விமானத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக பிரிவினைவாதிகள் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த சண்டையில் கலகக் குழுவைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 30 பேர் காயமடைந்திருப்பதாகவும் கலகக் குழுவின் செய்தித் தொடர்பாளரான எடுவர்ட் பாஸுரின் தெரிவித்துள்ளார்.
கலகப் படையினர் தீவிரத் தாக்குதல் தொடுத்திருப்பதை உக்ரைன் பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவரான ஒலக்ஸண்டர் டர்ச்சினோவ் உறுதிப்படுத்தியள்ளார். -BBC