ஏமனை ஸ்தம்பிக்க வைத்த கிளர்ச்சியாளர்களின் அராஜகம்: ஜனாதிபதி ராஜினாமா

yemen_president_001ஏமன் ஜனாதிபதி மாளிகையை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி மன்சூர் ஹதி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஏமனில் கடந்த 2012ம் மக்கள் புரட்சி வெடிக்கவே, சர்வாதிகார ஆட்சி புரிந்த அலி அப்துல்லா சலே பதவி விலகி, அப்தராபுக் மன்சூர் ஹாடி (Abd (Rabbuh Mansur Hadi)என்பவர் ஜனாதிபதி பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஹவுதீஸ் கிளர்ச்சியாளர்கள், ஏமன் தலைநகர் சனாவில் (Sana)நேற்று முன் தினம் ஜனாதிபதி மாளிகையின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து உள்ளே நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், மாளிகையின் மூன்று வாயில்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

கிளர்ச்சியாளர்களின் இச்செயலால் மனம் நொந்த ஜனாதிபதி பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில் அவர் கூறியதாவது, நான் எதற்காக ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்டேனோ, அதனை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அரசு முடக்கப்பட்டுவிட்டது.

இனியும் நாட்டில் அமைதியான நிலையை ஏற்படுத்திவிட முடியும் என்று நான் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த கடிதத்தை ஏற்க மறுத்துள்ள அந்நாட்டு நாடாளுமன்றம், இவ்விவகாரம் தொடர்பான அசாதாரண அமர்வை கூட்டி விவாதித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

-http://world.lankasri.com