உக்ரைனில் நிலவரம் மேம்படவில்லையெனில் புதிய தடைகளை விதிக்கப்போவதாக ஐரோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் மீண்டும் மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் கூடவிருக்கின்றனர்.
சென்ற வார இறுதியில் மரியுபோல் துறைமுகத்தை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தாக்கியதையடுத்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் ஏற்கனவே ரஷ்ய தனிநபர்கள், தொழில் நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவது, பயணங்களுக்குத் தடைவிதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. உக்ரைன் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு எதிராகவும் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கிழக்கு உக்ரைனில் நூற்றுக்கணக்கான ரஷ்ய பீரங்களும் கவச வாகனங்களும் இருப்பதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் தாங்கள் நேரடியாக ஈடுபடவில்லையென ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த தன்னார்வலர்கள்தான் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து போரிடுகின்றனர் என ரஷ்யா கூறியுள்ளது.
புதிதாகத் தடைகளை விதிப்பது பற்றியும் ஏற்கனவே இருக்கும் தடைகளை நீடிப்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் விவாதிப்பார்கள் என பிபிசியின் ஐரோப்பியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடவடிக்கைகளுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி கூடவிருக்கும் ஐரோப்பிய யூனியனின் தலைவர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
‘ஐரோப்பிய மதிப்பீடுகளின் மீதான தாக்குதல்’
ஐரோப்பிய மதிப்பீடுகள் உக்ரைனில் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக லிதுவேனியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லினாஸ் லிங்கேவிசியஸ் பிபிசியிடம் தெரிவித்தார். “நிலைமை மேம்படுவதாகத் தெரியவில்லையென்றால், நாங்கள் மேலும் தடைகளை விதிப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக ரஷ்யா மீது மேலும் பல தடைகளை விதிக்கப்போவது தொடர்பாக ஆராய்ந்துவருவதாக புதன் கிழமையன்று அமெரிக்க அரசு சூசகமாகத் தெரிவித்துள்ளது.
மரியுபோல் வன்முறையை அடுத்து, “பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்படி” தங்களது வெளியுறவுத்துறை அமைச்சர்களை வலியுறுத்தி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் செவ்வாய் கிழமையன்று கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
புதன்கிழமையன்றும் கிளர்ச்சியாளர்களுடன் உக்ரைனியப் படையினர் சண்டையில் ஈடுபட்டனர்.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள தெபெல்த்ஸெவ் நகரில் இருக்கும் அரசுப் படையினரை கிளர்ச்சியாளர்கள் முழுமையாகச் சுற்றிவளைத்துள்ளனர். மிக முக்கியமான ரயில் பாதை மையமாக இந்தப் நகரம் இருந்துவருகிறது.
பல கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், அந்த நகரமே பாழடைந்து காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குண்டுகள் வெடிக்கும் சத்தமும் தொடர்ந்து கேட்டபடி இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பிராந்தியங்களின் சில பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதிலிருந்து 4,800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 12 லட்சம் பேர் அந்தப் பகுதிகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
மார்ச் மாதத்தில் க்ரீமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதிலிருந்து பிரச்சனை ஆரம்பமானது. -BBC