‘மதநிந்தனை’ சட்டங்களுக்கு எதிராக உலகளாவிய பிரசாரம்

blasphemy

வலைப்பதிவாளர் ராய்ஃப் பதாவிக்கு சவுதி நீதிமன்றம் 1000 கசையடிகளை தண்டனையாக விதித்துள்ளது

 

மத ரீதியான உணர்வுகளைப் பாதுகாக்கின்ற சட்டங்களை வைத்திருக்கின்ற நாடுகள் அவற்றை ஒழிப்பதற்கான காலம் வந்துவிட்டது என்று மத நம்பிக்கைகளைச் சாராத, மனிதநேயத்தை வலியுறுத்துகின்ற அமைப்புகளின் ஒன்றியம் (The International Humanist and Ethical Union அல்லது IHEU) கூறுகின்றது.

இந்த அமைப்புகளின் கூட்டு,மதநிந்தனைச் சட்டங்களை எதிர்த்து உலகளாவிய ரீதியில் புதிய பிரசாரம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

பிரான்ஸில் நையாண்டிக் கேலிச்சித்திர சஞ்சிகையான சார்லி எப்தோ மீது நடத்தப்பட்ட இஸ்லாமியவாத தாக்குதல்களின் தொடர்ச்சியாக இந்த பிரசாரத்தை IHEU முன்னெடுக்கின்றது.

சார்லி எப்தோ மீதான தாக்குதல் கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாக உலகெங்கிலும் உணரப்பட்டது.

அதற்கு சமாந்தரமாக குறித்த நையாண்டி கேலிச்சித்திரங்களை வெளியிட்ட சஞ்சிகைகளுக்கு எதிராகவும் உலகெங்கிலும் போராட்டங்கள் நடந்திருகின்றன.

மதநிந்தனைச் சட்டங்களை, நாடுகளில் மத உணர்வுகளையும் சிறுபான்மை சமூகங்களையும் பாதுகாக்கின்ற ஏற்பாடுகளாக அவற்றின் ஆதரவாளர்கள் பார்க்கின்றனர்.

ஆனால், மற்றவர்களோ மாற்றுக் கருத்தாளர்களையும் கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்குவதற்கான கருவியாகவே மதநிந்தனைச் சட்டங்களை கருதுகின்றனர்.

மத நம்பிக்கைகளை சாராத, ஆதாரங்களின் அடிப்படையில் விடயங்களை அணுகுகின்ற அறவொழுக்கம் கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்காக குரல் கொடுக்கும் IHEU அமைப்பின் தலைவி சொஞ்சா எகரிக்ஸ், மதநிந்தனைச் சட்டங்களுக்கு எதிராக ஏற்கனவே போராடிவரும் செயற்பாட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக கூறுகின்றார்.

மதநிந்தனையும் கருத்துச் சுதந்திரமும்

மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் இணையத்தில் எழுதிய குற்றச்சாட்டில் ராய்ஃப் பதவாவிக்கு சவூதி நீதிமன்றம் ஆயிரம் கசையடிகளை தண்டனைகளாக விதித்தது.

பாகிஸ்தானில் ஆஸியா பீபீ என்ற 5 பிள்ளைகளின் தாயான, 50 வயதான கிறிஸ்தவப் பெண், தண்ணீர் கிளாஸ் சம்பந்தமான வாக்குவாதத்தில் இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக 2010ம் ஆண்டிலிருந்து மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கின்றார்.

மத்திய கிழக்கிலும் வடக்கு ஆபிரிக்காவிலும் இந்த மதநிந்தனைச் சட்டம் பொதுவாக எல்லா இடங்களிலும் ஒரே விதமாகக் காணப்படுவதாக ஆய்வுநிறுவனம் ஒன்று கூறுகின்றது.

மதத்தை இழிவுபடுத்துவதை தடுப்பதற்கான சர்வதேச நடவடிக்கை ஒன்றுக்கு ஐநா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று 56 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு தொடர்ச்சியாக கோரிவருகின்றது.

மத்திய கிழக்கில் மட்டுமன்றி ஐரோப்பா உள்ளிட்ட மற்றபல பிராந்தியங்களிலும் மதநிந்தனைச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

டென்மார்க்கில் மதநிந்தனை ஒரு குற்றம். ஆனால், அங்கு நாஜி குழுவொன்று யூத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது குற்றம் என்று அறிவிக்கப்பட்ட 1938க்குப் பின்னர் அங்கு இந்த சட்டம் பயன்படுத்தப்படவில்லை.

மியன்மாரில் அண்மையில் புத்தர் ஹெட்போன் அணிந்திருப்பதாகக் காட்டுகின்ற படங்களை வெளியிட்டிருந்த மூவர் மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கைதானார்கள்.

ரஷ்யாவிலும் 2014-ம் ஆண்டில், ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய மதநிந்தனைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

வரும் மார்ச்சில் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் சவுதியின் கோரிக்கையின் பேரில் மதநிந்தனை விவகாரம் பற்றியும் பேசப்படவுள்ளது.

2012-ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட 47 நாடுகளில் மதநிந்தனையை தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் நடைமுறையில் இருப்பதாக ஆய்வுநிறுவனம் ஒன்று கூறுகின்றது.

இலங்கை

இலங்கை போன்ற நாடுகளில் மதநிந்தனைச் சட்ட ஏற்பாடுகள் சிறுபான்மை சமூகங்களை பாதுகாப்பதற்கு மிகவும் அவசியமானவை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் யூ. அப்துல் நஜீம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இதேவேளை, மதநிந்தனைச் சட்டங்களே எந்தவொரு மத உணர்வுகளையும் புண்படுத்தக்கூடிய விதத்தில் பிரயோகிக்கப்படக் கூடாது என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இயக்குநர் டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தமிழோசையிடம் தெரிவித்தார்.

‘ஒருநாட்டில் மதநிந்தனை தடுப்புச் சட்டங்கள் சிறுபான்மை மதங்கள் உள்ளிட்ட எந்தவொரு மதங்களுக்கும் எதிராக பிரயோகிக்கப்படக்கூடாது. எனவே சட்டங்களைப் பொறுத்தவரை அரசாங்கங்கள் தாராளப்போக்குடன் அணுக வேண்டும். அதேநேரம் நாட்டிலுள்ள மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்துகின்ற சட்ட ஏற்பாடுகளும் இருக்கவேண்டும்’ என்றார் சரவணமுத்து.

‘இலங்கை போன்ற ஒருநாட்டில் நடைமுறை ரீதியான சூழ்நிலைகளுக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கும் இடையே ஒரு சமாந்திரமான அணுகுமுறையே அவசியப்படுகின்றது’ என்றும் கூறினார் பாக்கியசோதி சரவணமுத்து. -BBC