அல்-காய்தாவுக்கு துருக்கி உளவுத்துறை MIT அனுப்பிய ஆயுத ட்ரக்குகள் வசமாக சிக்கின !

துருக்கியின் அடானா மாகாண அரசு கோர்ட் ஆர்டர் பெற்று வீதியில் இடைமறித்து சோதனையிட்ட 3 ட்ரக்குகளில், ஏவுகணைகள் உட்பட யுத்தத்துக்கான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம், துருக்கி மத்திய அரசுக்கு கடும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இடைமறிக்கப்பட்ட ஆயுத ட்ரக்குகள், துருக்கியின் தேசிய உளவுத்துறை MIT-க்கு சொந்தமானவை! அது மட்டுமல்ல, அந்த ஆயுதங்கள் துருக்கியில் இருந்து சிரியா நோக்கி சென்றுகொண்டிருந்தன – சிரியாவில் யுத்தம் புரியும் அல்-காய்தா இயக்கத்துக்கு சப்ளை செய்வதற்காக!

இந்த விவகாரம் வெளியே வந்ததன் காரணம், துருக்கியில் அடானா மாகாண அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயுள்ள மோதல்தான் என்றாலும், ஒட்டுமொத்தமாக நாட்டின் இமேஜை இந்த விவகாரம் கவிழ்த்து விட்டது. துருக்கி, சிரியாவில் நடக்கும் யுத்தத்தில் ஆயுத சப்ளை செய்கிறது என்ற விஷயம் – அதுவும் அல்-காய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆயுத சப்ளை செய்கிறது என்ற விஷயம், அம்பலமாகி விட்டது. இரு ஒரு செய்தியாக மட்டும் வெளியாகியிருந்தால், துருக்கி அரசு பேசாமல் மறுப்பு தெரிவித்துவிட்டு இருந்திருக்கலாம். ஆனால், விவகாரம் அதற்குமேல் போய் விட்டது. எப்படியென்றால், வீதியில் மறித்து சோதனையிடப்பட்ட ட்ரக்குகளில் ஆயுதங்கள் இருந்ததுடன், அந்த ஆயுதங்களை அல்-காய்தாவுக்கு சப்ளை செய்வது தொடர்பான ஆவணங்களும் இருந்து தொலைத்துவிட்டன.

அந்த ஆவணங்கள், துருக்கியின் தேசிய உளவுத்துறை MIT-க்கு சொந்தமானவை! துருக்கி தேசிய உளவுத்துறைக்கு சொந்தமான ட்ரக்கில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களில், ஏவுகணைகள், மோட்டார் ஷெல்கள், விமான எதிர்ப்பு ஏவுகணை ஷெல்கள், ராக்கெட்டுகளின் வார்ஹெட்டுகள் ஆகியவையும் உள்ளன. இந்த ஆயுதங்கள் பற்றிய விரிவான பட்டியல், ட்ரக்கில் கிடைத்த உளவுத்துறை ஆவணங்களில் உள்ளது. துருக்கி அரசுக்கு இவ்வளவு சிக்கலும் போதாதென்று, அந்த ஆவணங்கள் வேறு, ஆல்-லைனில் லீக் செய்யப்பட்டு, பகிரங்கப்படுத்தப்பட்டு விட்டன!

இதற்கு துருக்கி அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை என்ன தெரியுமா? அந்த ஆவணங்கள் ஆன்லைனில் தெரியாதபடி இன்டர்நெட்டில் ப்ளாக் செய்ததுதான். அதாவது, துருக்கி நாட்டுக்குள் உளவுத்துறை ஆவணங்கள் வெளியான இணையதளம் தடை செய்யப்பட்டுள்ளது! அதே ஆவணம் இப்போது வேறு பல துருக்கி இணையதளங்களில் தோன்ற தொடங்கியுள்ளன. துருக்கி அரசு, இதற்கு மேலும் பூனையை மடியில் கட்டி வைத்திருப்பது, கடினம்!

-http://www.athirvu.com