பழிக்கு பழித்தீர்ப்போம்: ஐ.எஸ் கமாண்டர் உட்பட 55 தீவிரவாதிகளை கொன்ற ஜோர்டான்

jordon_airstrike_001ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலையங்களின் மீது ஜோர்டான் நடத்திய தாக்குதலில் 55 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

கடந்த மாதம் ஈராக்கின் ரக்கா (Raqqa) நகரில் ஜோர்டான் விமானியை சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தங்கள் அமைப்பை சேர்ந்த பெண் தீவிரவாதி சஜிதாவை விடுவிக்க வேண்டும், இல்லையேல் விமானியை கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

எனவே ஜோர்டான் அரசும் பெண் தீவிரவாதியை விடுவிக்க சம்மதம் தெரிவித்திருந்தது.

ஆனால் நேற்று முன் தினம் ஜோர்டான் விமானியை உயிருடன் தீயிட்டு கொளுத்தி கொன்ற வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதிகளின் இந்த கொடூர செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தங்கள் பிடியில் இருந்த பெண் தீவிரவாதி சஜிதா உட்பட இரண்டு பேரை ஜோர்டான் அரசு தூக்கிலிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள், பதுங்குமிடங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் மீது நேற்று சரமாரியாக வான்வழி தாக்குதல்களை நடத்தியது.

இதில் 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தீவிரவாதிகளின் நிலைகள் மீது சரமாரியாக குண்டுமழை பொழிந்துள்ளன.

இந்த தாக்குதல் நடத்தப்படும் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ஜோர்டான் அரசு, இது திருப்பியடிக்கும் நேரம் என கூறியுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் நைன் வேயின் இளவரசன் என்று அழைக்கப்படும் ஐ.எஸ். அமைப்பின் கமாண்டர் உட்பட 55 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-http://world.lankasri.com

ஐ.எஸ் தீவிரவாதிகளை பழிவாங்க வேண்டும்: ஜோர்டான் விமானியின் தந்தை கதறல்

ஜோர்டான் விமானியை கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை பழிவாங்க தமது நாடு கூடுதலான பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என விமானியின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பிணைக்கைதியாக இருந்த ஜோர்டான் விமானி முதாஃஹ் அல் கசாபெஹ், தீயிட்டு உயிருடன் கொல்லப்படும் காட்சி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தங்கள் பிடியில் சிறை வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜிகாதிகளுக்கான மரண தண்டனையை ஜோர்டான் நிறைவேற்றியது.

ஆனால் தனது மகனின் மரணத்தினால் மனம் நொந்த தந்தை தீவிரவாதிகளின் வெறிச்செயலை தாங்கி கொள்ள முடியாமல் ஆதங்கத்துடன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது, இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது மட்டுமே போதாது என்றும், ஜோர்டான் அரசு தீவிரவாதிகளை பழிவாங்க இன்னும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

இதற்கிடையே தமது நாட்டின் விமான ஓட்டுனர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற செய்தி வெளியானவுடன், இதற்கு அதிரும்படியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஜோர்டான் சூளுரைத்துள்ளது.