இலங்கையில், தமிழர் பகுதிகளில் ராணுவத்தின் பாதுகாப்புப் பணி நீடிக்கும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த தமிழர்கள் மத்தியில் இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு, சிறீசேனா புதிய அதிபரானவுடன் தமிழர்களுக்கு எதிரான கெடுபிடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அதிபர் சிறீசேனா சார்பாக அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில், “பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு பாதுகாப்புப் பணியை ராணுவம் தொடர வேண்டும் என ஆணையிடுகிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒரு மாத காலம் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள ராணுவம் குறைக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது:
நாடு முழுவதும் அமைதி நிலவும் நிலையில், தமிழர் பகுதிகளில் ராணுவம் ஏன் நீடிக்க வேண்டும் என்று தெரியவில்லை.
தமிழர்களது பெருவாரியான ஆதரவால்தான் தாம் வெற்றி பெற்றோம் என்பதை அதிபர் சிறீசேனா மறந்து விட்டார் என்று பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே, இலங்கை சுதந்திர தின விழா, பிப்ரவரி 4ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அதிபரின் உத்தரவு பொதுவான பாதுகாப்பு நடைமுறைதான் என அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்னே விளக்கம் அளித்துள்ளார்.
-http://www.dinamani.com
சிங்களவன் எவ்வளவு கொடுமை செய்தலும் செய்யட்டும்.அதை நாங்கள் பார்த்து சும்மாதான் இருப்போம் என்று பெரும்பாலான தமிழ் நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.