ஐநா விசாரணை அறிக்கை மீதான விவாதம் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு?

uno_slankaஇலங்கையில் இடம்பெற்ற  போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்  தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை மீதான விவாதம் ஐநா பேரவையில் மார்ச் மாதம் நடைபெறாது என்றும், அது செப்டம்பர் மாத அமர்வுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்க்குற்றச்சாட்டுகள்  குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை அடுத்த மாதம் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இலங்கையின் புதிய அரசாங்கம், தமக்கு கால அவகாசம் தருமாறு கோரியுள்ள நிலையில், விசாரணை அறிக்கை மீளாய்வை வரும் செப்டம்பர் மாதத்துக்குப் பிற்போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்த பிரதான நாடான அமெரிக்கா, அறிக்கை மீதான விவாதத்தை செப்டம்பர் மாத அமர்வில் நடத்துமாறு கோரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்களுக்கு மெருகேற்றும் பணியை வரும் 16ம் நாள் ஐ.நா நிபுணர் குழுவொன்று மேற்கொள்ளவுள்ளது.

இந்த அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும், மீளாய்வு செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே ஜெனிவாவில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜெனிவா மீதிருந்த கவனத்தை அமெரிக்கா இலங்கை மீது திருப்பியுள்ளதாக அண்மையில் இலங்கை சென்றிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: