ஐ.எஸ்.ஸூக்கு எதிராக நடவடிக்கை: நாடாளுமன்றத்திடம் ஒபாமா கோரிக்கை

obama_usaஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ராணுவத்துக்கு அதிகாரமளிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தேச கூட்டுத் தீர்மானம் ஒன்றின் வரைவையும் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் ஒபாமா கூறியிருப்பதாவது:

இராக், சிரியா நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கும், மக்களுக்கும் மட்டுமன்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கும், அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அச்சுறுத்தலாக உள்ளது. மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கும், அமைப்புகளுக்கும் இந்த அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஜேம்ஸ் ஃபோலே உள்ளிட்ட அமெரிக்கப் பிரஜைகளின் உயிரிழப்புகும் ஐ.எஸ். அமைப்புதான் காரணமாகும்.

அந்தப் பயங்கரவாத அமைப்பை அடக்காமல் விட்டால் அது மத்தியக் கிழக்கு பகுதியையும் தாண்டி அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று அந்தக் கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார். தனது இந்தக் கோரிக்கை தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்து உரையாற்றவும் அவர் திட்டமிட்டுள்ளார். ஐ.எஸ். அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க ராணுவத்துக்கு மூன்றாண்டு காலத்துக்கு மட்டும் அதிகாரமளிப்பது ஒபாமாவின் உத்தேசத் திட்டமாகும்.

-http://www.dinamani.com