இந்தியா – சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னை தீர வேண்டுமென்றால் இரு நாடுகளும் விட்டுக் கொடுக்கும் மனப்பானமையுடன் செயல்பட வேண்டும் என சீன அரசுப் பத்திரிகையான குளோபல் டைம்ஸின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
எல்லைப் பிரச்னை குறித்து இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை உயர் அதிகாரி யாங் ஜியேசி ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறித்து, சீன அரசுப் பத்திரிகையின் கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சீனா வந்திருந்தபோது, எல்லைப் பிரச்னையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக் கூடாது என்ற கருத்தொற்றுமை ஏற்பட்டது.
எல்லைப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பதில் சீனா எப்போதுமே உறுதியாக உள்ளது. இதுதொடர்பான செயல்திட்டம் குறித்த முன்மொழிவை வழங்க சீன அரசு தயாராக இருந்தது. இருப்பினும் இரு நாடுகளும் விட்டுக் கொடுத்துச் செயல்பட வேண்டும் என்பதை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது. எல்லைப் பிரச்னையைத் தீர்க்க இரு தரப்பினரும் சாதாரண புரிந்துணர்வோடு மட்டுமின்றி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விட்டுக் கொடுத்துச் செயல்படுவர் என நம்புகிறோம் என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சீன ஆய்வாளர் லென் வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது:
எல்லையில் ரோந்து செல்வதையும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதையும் இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது.
சர்ச்சைக்குரிய மக்மோகன் எல்லைக் கோட்டுப் பகுதியை சீனாவால் ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் இந்தியா விட்டுக் கொடுத்துச் செல்ல ஒப்புக்கொள்ளாவிட்டால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது என்று அந்தக் கட்டுரையில் லென் கூறியுள்ளார்.
-http://www.dinamani.com