மனித உரிமைகள் மீது முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கொண்டுள்ள நிலை வியப்பைத் தரவில்லை என பிகேஆர் கூறுகிறது.
ஏனெனில் தமது “கொடூரமான சகிப்புத் தன்மை இல்லாத 20 ஆண்டு கால ஆட்சியின் போது மக்களுடைய அடிப்படை உரிமைகளில் பெரும்பகுதி கீழறுப்புச் செய்யப்பட்டதற்கு” அவரே பொறுப்பு என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறினார்.
“உண்மையில் அரசாங்க அதிகார அத்துமீறல்களுக்கும் போலீஸ், நீதித் துறை, அரசாங்கச் சேவை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றைக் கீழறுப்புச் செய்ததற்கும் மகாதீர் மீது வழக்குப் போடப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்,” என்றார் அவர்.
“அதிகாரத்தில் இருந்த வேளையில் அவருடைய நடவடிக்கைகள் கிரிமினல் தன்மை கொண்டவை. அந்த நடவடிக்கைகள் நமது அமைப்புக்களுக்கும் ஆளுமைத் துறைகளுக்கும் நீண்ட கால சேதத்தை ஏற்படுத்தி விட்டன. வரலாறு மகாதீரை கடுமையானவராக சித்தரிப்பது திண்ணம்”, என்றும் சுரேந்திரன் சொன்னார்.
மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியுள்ள மகாதீர், முக்கியமான அரசியலமைப்பு உரிமைகளை “பயனற்றதாகவும் அர்த்தமில்லாததாகவும்” மாற்றி விட்டதாக அவர் இன்று விடுத்த அறிக்கையில் பழி சுமத்தியுள்ளார்.
அந்த நிலை நடப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் காலம் வரை தொடருவதாகவும் சுரேந்திரன் குறிப்பிட்டார்.