ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பான் கீ மூனுக்கும் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இதேவேளை தாம் இலங்கைக்கு வருமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவே குறித்த இருவரையும் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்த மாத இறுதிக்குள் தென்னாபிரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்போது தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் பொறிமுறை இலங்கைக்கும் ஏற்புடையது என்று தெரியவந்தால், அதனை இலங்கையில் அமைக்கப்படவுள்ள உள்ளுர் விசாரணை பொறிமுறைக்கு சமாந்தரமாக கொண்டு செல்ல தயாராக உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தென்னாபிரிக்காவின் பொதுமன்னிப்பு கொள்கை ஏற்புடையதல்ல என்ற போதும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்லிணக்கம் மூலம் வடுக்களை ஆற்றுவதற்கு அதனை பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-http://www.tamilwin.com

























