பேச்சுவார்த்தையில் சமரசம்: உக்ரைனின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது

ukrine_meeting_001உக்ரைன் நாட்டு பிரச்சனைகள் குறித்து உலக தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டிருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைன் உள்நாட்டு பிரச்சனைகள் குறித்து ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் தலைவர்கள் நேற்று அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த தொடர் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி 15ம் திகதி முதல் உக்ரைன் நாட்டில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தங்கள் நிறுத்தப்பட்டு நாட்டில் அமைதி திரும்பும் வகையில் உடன்படிக்கை செய்துள்ளதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே(Francois Hollande), பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், ஒரு சில பிரச்சனைகள் குறித்து பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Belarus நகரில் சுமார் 17 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் நாட்டின் உள்நாட்டு யுத்தங்கள் நிறுத்துவது தொடர்பாகவும், கிழக்கு உக்ரைன் பகுதிகளிலிருந்து பயங்கர ஆயுதங்களை திரும்ப பெறுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

உக்ரைன் அரசிடம் போரிட்டு வரும் ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்களும் இந்த உடன்படிக்கைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இந்த உடன்படிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தானும், ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கலும்(Angela Merkel) வலியுறுத்த உள்ளதாக பிராங்கோய்ஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com