எண்ணெய் வணிகம், ஆள் கடத்தல், தொல்பொருள் விற்பனை போன்ற நடவடிக்கைகள் மூலம் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பும், அல்-காய்தாவுடன் தொடர்புடைய பிற பயங்கரவாத அமைப்புகளும் நிதி திரட்டுவதைத் தடை செய்யும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ரஷியாவால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை 35 நாடுகள் வழிமொழிந்தன. எனினும் இந்தியா இந்தத் தீர்மானத்தை வழிமொழியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்மானத்தில், பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல்களை நிகழ்த்துவதற்காகப் பயன்படுத்தும் நிதி அவர்களுக்குக் கிடைக்க விடாமல் செய்வதற்கான பல்வேறு வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன.
அண்மைக் காலமாக ஐ.எஸ். பயங்கரவாதிகளால் எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்து இந்தத் தீர்மானத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த அமைப்பினரின் எண்ணெய் வணிகம், தொல்பொருள் விற்பனை, ஆள்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் வழிமுறைகளும் இந்தத் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்தத் தீர்மானத்தில், ஐ.எஸ்., அல்-நூஸ்ரா போன்ற அல்-காய்தாவுடன் தொடர்புடைய பிற பயங்கரவாத அமைப்புகள் ஆகிவற்றுடன் உலக நாடுகள் வர்த்தகம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி எந்த நாடாவது அவர்களுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டால் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, குறிப்பிட்ட பயங்கரவாத இயக்கங்கள், அவர்களது முகவர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும்படி உலக நாடுகளை இந்தத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
ஐ.எஸ்., அல்-காய்தா தொடர்பு பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து எண்ணெய் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக, உளவுத் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு ஒத்துழைப்பை உலக நாடுகள் வழங்க வேண்டும் எனவும் இந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-http://www.dinamani.com