இந்தோனேசியாவுடனான ராஜதந்திர தொடர்பினை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் எச்சரித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையினை ஜகார்த்தா நிர்வாகம் முன்னெடுத்து செல்லும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்த போதிலும் ஐந்து வருட இடைவெளிக்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு மீண்டும் மரண தண்டனையை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இந்தநிலையில், கடந்த மாதம் ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட ஆறு பேருக்கான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனேசியாவின் ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ பதவியேற்றதன் பின்னர் முதலாவது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கும் அவுஸ்திரேலியர்களை விடுவிப்பதற்காக பிரதமர் டோனி அபாட் இறுதி நேர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவரின் வேண்டுகோளினை ஜகார்த்தா நிர்வாகம் ஊதாசீனம் செய்யும் பட்சத்தில் பல்வேறு எதிர்நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா இறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக ஜகார்த்தா பாலித் தீவில் உள்ள சுற்றுலா ஸ்தலத்திற்கு அவுஸ்திரேலியர்களை அனுப்புவதில் தடையை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய பிரஜைகளான மயூரன் சுகுமாரன் மற்றும், அன்ட்ரூ சான் என்பவர்களே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
-http://world.lankasri.com


























