இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!- ஷோபா சக்தி

p44aகொரில்லா’வில் தொடங்கி ‘கண்டி வீரன்’ வரையிலும் தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்துவக் குரல். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இயங்கி, பின்னர் அதில் இருந்து விலகி, புலிகளை இப்போதுவரை கடுமையாக விமர்சித்து வருபவர். சமகாலத்தின் சிறந்தகதைசொல்லிகளில் ஒருவரான ஷோபா சக்தி, இப்போது கதாநாயகன். ‘தீபன்’ என்ற பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார்.

பாரீஸில் இருந்து இராமேஸ்வரத்தில் கடைசிக்கட்டப் படப்பிடிப்புக்காக வந்திருந்த ஷோபா சக்தி இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து விகடனிடம் தெரிவித்துள்ளவற்றில் சில,

தமிழீழப் போராட்டம் இனி என்ன ஆகும்?

இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை. ஆயுதப் போராட்டங்கள் உருவான காலகட்டம் வேறு. இன்று தலைமுறைகள் மாறிவிட்டன. நாம் 80-களில் சிந்தித்தது போல இப்போதைய தலைமுறையினர் சிந்திப்பது இல்லை. உலகம் முழுக்க இருந்த புரட்சிகரச் சூழல், தேசிய விடுதலைப் போராட்டங்கள், மார்க்ஸியச் சூழல்கள் இன்றைக்கு இல்லை. இலங்கையில் மட்டும் அல்ல… உலகம் முழுவதுமே இதுதான் நிலை.

சமீபத்தில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மகிந்த ராஜபக்‌ச தோற்கடிக்கப்பட்டு, மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முந்தைய தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்களிக்கும் உரிமையின் மீது செல்வாக்கு செலுத்தும் சக்திகளாக விடுதலைப் புலிகள் இருந்தனர். ஆனால், இந்த முறை ராஜபக்சவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற சுயமுடிவை எடுத்து தமிழ் மக்கள் வாக்களித்தனர்.

இப்போது மக்களின் மனநிலை, நாம் நினைத்தது நடந்துவிட்டது என்பதுதான். தங்களின் செல்வாக்கு வரம்புக்கு உட்பட்டு ராஜபக்சவைத் தோற்கடித்ததன் மூலம், மனதில் இருந்த கோபத்தின் சிறுபகுதியைத் தணித்துக் கொண்டார்கள். ஆனால், மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றதன் மூலம் தமிழர்களுக்கு எந்த நன்மையும் நடந்துவிடப் போவதில்லை. சில தமிழர்களுக்கு அதிகாரத்தைச் சுவைக்கக் கொடுப்பதாலேயே, தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிடாது.

மக்கள் போராட்ட இயக்கங்களின் செயல்பாட்டுக்குக்கூட இனி சாத்தியம் இல்லையா?

அத்தகைய மக்கள் போராட்ட இயக்கத்தைக் கட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு லாயக்கு இல்லை; அவர்களிடம் அப்படி ஒரு நோக்கமே இல்லை. கூட்டமைப்பினர், இந்த நாடாளுமன்ற அமைப்பு முறைக்குள் பதவிகளைப் பெற்று அதிகாரத்தைச் சுவைப்போரின் அங்கமாகவே மாறிவிட்டனர். ஆனால், இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான் காலம், காலமாக மக்கள் ஆதரித்தும் வந்துள்ளனர்.

ஒருவகையில் பார்த்தால் விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற ஆயுதம் தாங்கிய இயக்கங்களைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரவாயில்லை. அவர்கள் யாரையும் கொலை செய்யவில்லை. இந்த இயக்கங்கள் இவ்வளவு உயிர்களைக் கொடுத்து, இவ்வளவு மக்களைப் பலிகொடுத்து சாதித்தது என்ன? கொழும்பில் இருந்த இராணுவத்தை இழுத்துக் கொண்டுவந்து அல்லைப்பிட்டியில் விட்டதுதான் மிச்சம்.

இலங்கையில் தமிழர் தரப்பிலும் சிங்களவர் தரப்பிலும் சேர்த்து இதுவரை மூன்று மிகப் பெரிய ஆயுதப் போராட்டங்கள் நடந்துள்ளன. மூன்றிலுமே ஆயுதம் தூக்கியவர்கள், மக்களுக்கு எதிராகத்தான் மாறினார்கள். அதனால் மக்களுக்கு ஆயுதப் போராட்டங்கள் மீது என்றென்றைக்கும் மறக்கவியலாத கசப்பான நினைவுகள்தான் மிஞ்சியிருக்கின்றன. நாம் விளைவுகளை வைத்துதான் ஒவ்வொன்றையும் மதிப்பிட வேண்டியுள்ளது. அப்படிப் பார்த்தால் ஆயுதப் போராட்டத்தைவிட தேர்தல் அரசியல் சிறந்தது.

நாங்கள் தப்பித்துவிட்டோம். ஆனால், யுத்தத்திலும் அதற்குப் பிறகும் அங்கு சிக்கிக்கொண்டிருக்கும் மக்களின் நிலைமை என்ன? பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக வேண்டும், மக்கள் வேலைக்குப் போக வேண்டும், சாப்பிட வேண்டும், உயிர் பயம் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்… இதற்கு, சுமுகமான சமூக வாழ்க்கை வேண்டும். இதைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.

உலகத்திலேயே மிகக் கடுமையான ஆயுதப் போராட்டத்தை நடத்திப் பார்த்துவிட்டுத்தான், இந்த மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் கடும் சண்டை நடந்துகொண்டிருந்தபோது குரோஷியா அதிபர் சொன்னதை இங்கு நினைவுகூர்கிறேன்… ‘பத்து நாட்கள் சண்டை நடத்தி தீர்வு காண்பதைவிட, பத்து ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம்’. அதை நான் வழிமொழிகிறேன்.

சரி… இப்போதைய நிலையில் என்னதான் தீர்வு?

பிரச்சினை என ஒன்று இருந்தால் அதற்கு தீர்வும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. இலங்கையில் பிரச்சினை மட்டும்தான் இருக்கிறது.

இது யதார்த்தம். ஆனால், தீர்வு என்னவாக இருக்க முடியும் எனக் கருதுகிறீர்கள்?

நமக்கு அறம் சார்ந்து ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால், எதையும் யதார்த்தத்தில் இருந்து பரிசீலிக்க வேண்டும். என்னளவில் இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்கிறேன்

இப்போது அமுலில் உள்ள மாகாண சபை என்பது, அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதிதான். கிழக்கில் ஒரு தேர்தல் நடத்தி வடக்குடன் இணைந்திருப்பதா, தனித்திருப்பதா என்பதை முடிவுசெய்ய வேண்டும். இதற்கு அப்பால் ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்ட இயக்கங்கள் கட்டப்படத்தான் வேண்டும்.

அதற்கு முன்பு, மக்கள், ஆயுதப் போராட்டக் கலாசாரத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும். ‘பிரச்சினை என்றால் போட்டுத் தள்ளுவோம்’ என்ற மனநிலையில் இருந்து, ‘பேச்சுவார்த்தைக்கு அழைப்போம்’ என்ற மனநிலைக்கு வர வேண்டும்.

தமிழர், சிங்களவர் இரு தரப்பிலும் உள்ள ஜனநாயக சக்திகள் ஐக்கியப்படுவதன் வழியே, ஒரு நீண்ட காலத் தீர்வை நோக்கி நகர முடியும். அதற்கு, சிங்களப் பேரினவாதமும், கடும்போக்குத் தமிழ்த் தேசியவாதமும் கைவிடப்பட வேண்டும்.

தமிழக அகதிகள் முகாம்களில் இருப்போர் மறுபடியும் இலங்கைக்கு அனுப்பப்படுவதைப் பற்றிய பேச்சுக்கள் இப்போது மேல் எழுந்துள்ளனவே?

லட்சக்கணக்கான தமிழ் மக்கள், முகாம்களில் வாழ்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்தவர்களின் குடும்பங்களில் இங்கேயே பிறந்து வளர்ந்த ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு இதுதான் சொந்த நாடு. அவர்களை எப்படிக் கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியும்? அப்படி அனுப்பினால் கிட்டத்தட்ட அது ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் போல, தமிழ்நாட்டில் இருந்து சென்று இலங்கை மலையகப் பகுதிகளைச் செப்பனிட்டு தேயிலை, கோப்பி தோட்டங்களாக மாற்றியவர்களை மறுபடியும் அள்ளிக்கொண்டுவந்து தமிழகத்தில் தள்ளியதைப்போலதான் இருக்கும்.

அப்போது இலங்கையில் இருந்து தமிழகம் வந்த மக்களை மலையகத்தில் இருந்து அழைத்து வந்த ரயிலுக்கு ‘அழுகை கோச்’ எனப் பெயர். அந்த அளவுக்கு மக்கள் அந்த மண்ணோடு ஒன்றிப்போய் இருந்தார்கள். அதே போன்ற நிலைமைதான் இங்கும். மீண்டும் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்துவதும் நிராகரிப்பதும் மக்களின் விருப்பம். பல ஐரோப்பிய நாடுகளில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தாலே, குடியுரிமை கொடுத்து விடுகிறார்கள்!

-http://www.tamilwin.com

TAGS: