நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவுடன் இந்தியா பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அணுசக்தியில் ஒத்துழைப்பு முதல், கால்நடைகளைத் தாக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர் பற்றியோ இலங்கை அகதிகள் பற்றியோ பேச்சே இல்லை.
மீனவர் பிரச்சினை பற்றி செய்தியாளர்களிடம் சிறீசேனா கூறுகையில், ஆக்கப்பூர்வமாகவும் மனிதாபிமானத்துடனும் பிரச்னையை அணுகித் தீர்வு காண ஒப்புக் கொண்டிருக்கிறோம் என்று மட்டுமே தெரிவித்தார்.
சிறீசேனா இந்தியா வருவதற்கு முன்பாக 82 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. இருப்பினும், மீனவர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு மிக எளிய வழி, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்துவதைப் போல, இராமேசுவரம் பகுதியில் இழுவைப் படகுகளுக்கு இந்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே. இந்த விவகாரத்தில் இலங்கை அரசு, இந்திய அரசு, வடக்கு மாகாண அரசு மூன்றும் இணைந்து செயல்படுவதே சரியானதாக இருக்கும்.
ராஜீய உறவுக்கு மற்ற ஒப்பந்தங்களும் முக்கியமானவை என்றாலும், தமிழக மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு மத்திய அரசு அழுத்தம் தரவில்லையா அல்லது இலங்கை அதிபர் சிறீசேனா இதில் ஆர்வம் காட்டவில்லையா என்பதைத் தீர்மானிக்க இயலவில்லை.
இனப் படுகொலை தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அண்மையில் இலங்கை வடக்கு மாகாண அரசு நிறைவேற்றி இருக்கும் தீர்மானம், சிறீசேனா தலைமையிலான அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகளும், பேட்டிகளும் குறிப்பிட்டாலும், இந்த அறிவிப்பு வடக்கு மாகாணத் தமிழர்களின் உணர்வு வெளிப்பாடே தவிர, அதிபர் சிறீசேனா மீதான நம்பிக்கையிழப்போ அல்லது நெருக்கடி தரும் நோக்கமுடையதோ அல்ல என்பதை, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிறீசேனா அமைச்சரவையும் வடக்கு மாகாண அரசின் தீர்மானத்தை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதன் வெளிப்பாடாக, இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பகுதியில் 1,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பது என்ற முடிவை அமைச்சரவை மேற்கொண்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் அருகே, வலிகாமத்தில் உருவாகி வரும் மாதிரிக் கிராமத்தில் 1,022 குடும்பங்களை குடியமர்த்தவும் தீர்மானித்துள்ளது.
இத்தகைய சூழலில் இந்தியா வந்துள்ள சிறீசேனாவிடம் இலங்கைத் தமிழர் வாழ்வாதாரம் குறித்து அழுத்தம் தர வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருக்கிறது. ஒருவேளை, அடுத்த ஓரிரு மாதங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்லவிருப்பதால், அந்தப் பயணத்தின் வெற்றிக்காக இத்தகைய ஒப்பந்தங்கள் கையெழுத்திடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவோ என்று கருதவும் இடமிருக்கிறது.
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது மட்டுமே இந்திய அரசின் நோக்கமாக இருக்கிறது. இருப்பினும், இலங்கையில் குடியமர்த்துதல் பணிகள் முழுமையாக முடிந்த பிறகே இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) உரையாற்றிய ஆளுநர் ரோசய்யா, “இலங்கையில் இடம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, இங்கு அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே தமிழக அரசின் கருத்து’ என்பதை ஆணித்தரமாக முன்வைத்துள்ளார்.
இலங்கையில் மறுகுடியமர்த்துதல் என்பது மிகவும் சிரமமான பணியாக இருந்து வருகிறது. யாருடைய நிலம், யாருக்குச் சொந்தமானது, யார் யாருடைய வாரிசு என்பதெல்லாம் தேடிக்கண்டடைய முடியாத விஷயங்களாக இருக்கின்றன.
இந்தச் சிக்கல்களை முன்வைக்கும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தாயகம் திரும்பினால் இன்றைய சூழலில் அவர்களுக்கும் சேர்த்து வீடுகள் கட்டி, மறுகுடியமர்த்துதல் சிரமம், அவர்களது குழந்தைகளுக்கு இந்தியாவில் கிடைக்கும் சிறந்த கல்வியை இங்கே கிடைக்கச் செய்வதும் இயலாதது என்று ஒப்புக் கொள்கிறார்.
ஆனால், அவர் மற்றொரு வாதத்தையும் முன்வைக்கிறார். அவர்கள் திரும்பி வந்தால், சிங்களர் குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்பதுதான் அது.
தற்போதைய சிறீசேனா அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கியிருப்பதாலேயே, சிங்களர் குடியேற்றம் நின்றுவிடும் என்று சொல்லிவிட முடியாது. இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிங்களர் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்டதாக வடக்கு மாகாண அரசு இல்லை என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இந்த நிலையில், தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகளுக்கு அங்கே முதல் கட்டமாக வீடுகள், காணிகள் ஒதுக்கப்படவும், அதை இப்போதே பத்திரப்பதிவு செய்து தரவும் வேண்டும்.
வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை இந்தியாவில் உதவித்தொகையுடன் தங்கியிருக்கவும், வீடுகள் கட்டி முடித்த பிறகு குடிபெயரச் செய்யவும் வேண்டும்.
அவர்தம் குழந்தைகள் இங்கே உயர் கல்வி படித்துக் கொண்டிருந்தால், அவர்கள் படித்து முடிக்கும்வரை குடும்பமோ அல்லது குழந்தைகள் மட்டுமோ இங்கு தங்கியிருக்கவும் வகை செய்ய வேண்டும்.
இத்தகைய அணுகுமுறைகள், தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழர்களுக்கு வலியற்றதாகவும், இயல்பானதாகவும் அமையும்.
-http://www.tamilwin.com