இஸ்லாமை தவறான வழியில் பயன்படுத்தும் தீவீரவாதிகள் மீதுதான் போர் தொடுப்பதாகவும், இஸ்லாமியர்கள் மீது இல்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான உச்சி மாநாட்டில் ஒபாமா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “நாங்கள் இஸ்லாத்துக்கு எதிராக போர் புரியவில்லை. எங்களது போர் இஸ்லாத்தின் மரபைத் திரித்தவர்களுக்கு எதிரானது. ஐ.எஸ். அல்கொய்தா போன்ற தீவிரவாதிகள், இஸ்லாத்தை பாதுகாக்கும் போராளிகள் என்ற போர்வையில் தங்களுக்கென அடையாளத்தை, அங்கீகாரத்தை தேடிக்கொள்ள கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
அமெரிக்காவும் ஏனைய பிற மேற்கத்திய நாடுகளும் இஸ்லாத்துக்கு எதிராகப் போர் புரிந்து வருவதாகவும் அவதூறு பரப்பி வருகிறது.
இதைக் கூறித்தான் ஐ.எஸ். படைக்கு ஆள் திரட்டப்படுகின்றது. இளைஞர்கள் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.
முஸ்லிம் சமூகத்துக்கு வெளியில் இருப்பவர்கள் தீவிரவாதிகளின் பொய் பிரசாரத்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.
மேலும் இஸ்லாமும் – மேற்கத்திய நாடுகளும் எதிரும் புதிருமானவை, நவீன வாழ்வியலும் இஸ்லாமும் ஒத்துப்போகாதவை போன்ற அவதூறு பிரச்சாரங்களைப் புறந்தள்ள வேண்டும்” என பேசியுள்ளார்.
–http://world.lankasri.com