இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிட்டு தமிழ் மக்களுக்கான நீதியை வழங்க வலியுறுத்தி யாழில் மாபெரும் போராட்டம் ஒன்று யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
போராட்டம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரான அமிர்தலிங்கம் இராசகுமாரன் அவர்கள் தமிழ் சி.என்.என் இன் இயக்குனரும், பசி ஒழிப்பு உலக மன்றத்தின் (Hunger Free World Foundation) நிறுவனருமான அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களுக்கு வழங்கிய நேர்காணலைக் காணலாம்.
இன்று இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து சொல்லுங்கள்?
இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரால் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு விசாரணையை முடித்துக் கொண்டு அதன் இறுதி அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட இருந்தது.
ஆனால், அந்த அறிக்கையானது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினைக் காரணம் காட்டி வெளியிடப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. இது ஈழத்தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.
ஈழத் தமிழ் மக்கள் குறித்த சர்வதேச விசாரணை மூலம் இங்கே இடம்பெற்ற மனிதப் பேரவலங்களுக்கு நீதி கிடைக்கும். இந்தக் கொடூரங்களைப் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். ஓரளவாவது எங்கள் இழப்புக்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். என எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால், இன்று இந்த அறிக்கை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட எங்களுடைய மன வேதனையை வெளிப்படுத்துவதற்கும் இந்த அறிக்கை வெகு விரைவாக வெளியிடப்பட வேண்டும் என்றும், இந்த அறிக்கையின் மூலம் கொண்டு வரப்படும் உண்மைகளிலே இங்கே குற்றவாளிகளாகக் காணப்படுபவர்கள் அனைவருமே சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை மூலம் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், யாழ் பல்கலைக்கழக ஆசிரிய சமூகமும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், ஊழியர்களும் இணைந்து இங்கே வடக்கு கிழக்கில் இருக்கின்ற அனைத்து பொது அமைப்புக்களையும் ஒன்றிணைத்து ஒரு அமைதியான பேரணியினை நாங்கள் நடாத்தி இருந்தோம்.
சர்வதேசம் எங்களை ஏமாற்றுவதை பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். அதனை நாங்கள் ஜனநாயக ரீதியில் எதிர்த்துப் போராடுவோம். என்பதனை சர்வதேசத்துக்கு நாங்கள் எடுத்துக் காட்டி இருக்கின்றோம். என்றார்.
-http://www.tamilcnnlk.com