தமிழக அகதிகளை அழைத்து வர முடியாது! – மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன்

swaminathan-vavuniyaஎவ்வித வசதிகளும் இன்றி தமிழக அகதிகளை அழைத்து வர முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், அங்கு மக்களுடனான சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் இருந்து வருவதற்கு 20 முதல் 30 வீதமானவர்கள் மாத்திரமே விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இங்கு வந்து வசிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவர்கள் இங்கு வரவழைக்கப்படுவர்.

அதுமட்டுமின்றி, இந்தியாவிலிருந்து அகதிகளை அழைத்து வருவதற்கு முன்னர் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். அவர்கள் இழந்த காணிகளை திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் இந்திய அரசின் ஒத்துழைப்புடன் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்.

அதுமட்டுமின்றி இந்தியாவிலிருந்து அழைத்து வரப்படும் அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பின்னரே வரவழைக்க முடியும். ஆனால் இந்தியாவிலிருந்து வரவுள்ளவர்களுக்கு இங்கு காணி இருக்குமாயின் அவர்கள் வருவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்திய வீட்டுத்திட்டத்தில் முறைக்கேடுகள் நிகழ்ந்திருப்பது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், இந்திய வீட்டுத்திட்டத்தில் பிரச்சினையானது அரசாங்கத்தின் பிரச்சினை இல்லை.

அது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் பிரச்சினையே. அவ்வாறான பிரச்சினை தொடர்பில் கேட்டு அதற்கு ஓர் முடிவு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், வவுனியா பூந்தோட்டம், சிதம்பரபுரம் முகாம் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில், அங்குள்ள மக்களின் இணக்கப்பாட்டுடன் அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடி இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

-http://www.tamilwin.com

TAGS: