கிழக்கில் காணி அதிகாரம் இல்லாத அமைச்சுகளை கூட்டமைப்பு கையேற்பது தேவையா?

battiகாணி அதிகாரம் இல்லாத அமைச்சுக்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கையேற்பது தேவையா? யுத்தகாலத்தில் பல லட்சக்கணக்கான தமிழ்மக்களின் காணிகள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டன அல்லது சுவீகரிக்கப்பட்டன. இழந்த காணிகளை மீட்பதற்காவது காணிஅதிகாரத்தை த.தே.கூட்டமைப்பு யாருக்கும் விட்டுக்கொடுக்கக்கூடாது.

இவ்வாறு கிழக்குமாகாணசபையின் த.தே.கூட்டமைப்பின் மூத்தஉறுப்பினர் துரைரட்ணம் தமது மட்டக்களப்பு பணிமனையில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார்.

கிழக்குமாகாணசபையில் அமைச்சுப்பதவி உறுப்பினர் துரைரட்ணத்திற்கு வழங்கப்படாதததையறிந்து அதிர்ச்சியும் ஆத்திரமுற்ற ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் நேற்று அவரது மட்டு.அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்தி அதற்கான விளக்கத்தை அளிக்கையிலே துரைரட்ணம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

முதலில் உங்களது ஆத்திரத்திற்கான விடயத்திற்குவருகிறேன். த.தே.கூட்டமைப்பு என்னை அமைச்சுப்பதவிக்கு நிராகரித்த தீர்மானத்தை நாம் நிராகரிக்கின்றோம். அது தொடர்பாக எமது கட்சிசார்பில் பாராளுமன்ற உறுப்பினர்சிவசக்தி ஆனந்தன் பூரண விளக்கமளித்துள்ளார்.

நான் அமைச்சுப்பதவியையோ எம்.பி பதவியையோ கேட்டு இந்த நீண்ட போராட்டபயணத்தில் இணையவில்லை.அதற்கு நான் ஆசைப்பட்டவனுமல்ல. எனினும் எமக்கான உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றபோது அதனை தட்டிக்கேட்காமலிருக்கமுடியாது.

வடக்குகிழக்கு மாகாணசபையைக் கொண்டுவந்தவர்கள் நாம். யாரும் இதில் பங்குபோட்டுக்கொள்ளமுடியாது.
அமைச்சுப்பதவி கிடைக்கவில்லையென்பதற்காக நான் எனது மக்கள் சேவையை நிறுத்தமாட்டேன். அதையிட்டு கவலைப்படவுமில்லை.நான் என்றும் உங்களோடுதான் நிற்பேன்.

காணியதிகாரமில்லாத அமைச்சு தேவையா?

அதிகாரப்பரவலாக்கம் நடைபெறவிருக்கின்ற இன்றைய சூழலில் தமிழர்களைப்பொறுத்தவரையில் காணி அதிகாரம் மிகவும் முக்கியமானது.

யுத்தகாலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் லட்சக்கணக்கான ஏக்கர்காணிகள் பறிக்கப்பட்டனஅபகரிக்கப்பட்டன அல்லது சுவீகரிக்கப்பட்டன. எல்லைகளில் சிங்களவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதற்கு அப்போதிருந்த ஒருசில முஸ்லிம் அமைச்சர்களும் உடந்தை.

மட்டு.மாவட்டத்தில் மட்டும் கிழக்குமாகாணசபைக்குரிய 1லட்சத்து 13ஆயிரம் ஏக்கர் காணிகள்வனவளதிணைக்களத்தால் வர்த்தமானிஅறிவித்தல்மூலம் 2013இல் கையகப்படுத்தப்பட்டன.

வாகரை செங்கலடி கிரான் பட்டிப்பளை வவுணதீவு போன்ற பிரதேசங்களிலுள்ள மேய்ச்சல்காணிகள் விவசாயக்காணிகள் என பலதரப்பட்ட காணிகள் பறிபோயின.

மேலும் எல்லைப்பிரதேசங்களிலுள்ள காணிகள் அபகரிக்கப்பட்டன. அத்துமீறிகுடியேறப்பட்டன.

முதலமைச்சரை விட்டுக்கொடுத்தோம். பல பெறுமதியான அமைச்சுகளை விட்டுக்கொடுத்தோம். ஆனால் காணியதிகாரத்தை விட்டுக் கொடுக்கலாமா?

த.தே.கூட்டமைப்பினுள் ஒருசிலரின் சுயநலஅரசியலுக்கான பதவிமோகத்திற்காக எமது தியாகத்தை விலைபேசமுடியாது. அரசியலுக்கு நேற்று வந்தவர்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

இன்னமும் தலைமைகள் தன்னிச்சையாக சர்வாதிகாரப்போக்கில் செயற்படுவது கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாகவிருக்காது.

இந்நிலைதொடர்ந்தால் மட்டக்களப்புமாவட்டத்திலிருந்து மக்கள்போராட்டம் வெடிக்கும்.அதற்கு தலைமை தாங்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்குவரும் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றேன்.

காணிப்பிரச்சினை தொடரும்!

வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் இழந்த காணிகளையாவது மீளப்பெறவேண்டிய கட்டாயத்தில்இருக்கின்றனர். கடந்தகாலங்களில் தமிழ்மக்கள் காணிவிடயத்தில் ஏமாற்றப்பட்டார்கள். இன்னமும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் இராணுவம் முகாம் தொல்பொருள் வனவளம் என்று தேவையில்லாத சாட்டுக்களைச் சொல்லி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியது. இழந்த வலிகாமம் வடக்கு பிரதேசங்களை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. அதுபோல கிழக்கிலும் லட்சக்கணக்கான ஏக்கர் காணிகள் உள்ளன.

தற்சமயம் உள்ளுராட்சி எல்லைகள் வரையறுக்கப்படப் போகின்ற காலம். மட்டு.அம்பாறை திருமலை எல்லைக் கிராமங்களின் காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.

பிரதேச காணிப்பயன்பாட்டு ஆணைக்குழு மாவட்ட காணி பயன்பாட்டு ஆணைக்குழு மாகாண காணி பயன்பாட்டு ஆணைக்குழு இவற்றுக்கான பலதரப்பட்ட பணிகள் காத்திருக்கின்றன.

எனவே இன்றைய நிலையில் காணிஅதிகாரமுடைய காணியமைச்சை விட்டுக் கொடுப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது. மண்ணுக்காக போர் நடாத்தியவர்கள் மரியாதை இழக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். என்றார். மக்களும் கைதட்டி ஆரவாரித்து உற்சாகப்படுத்தினர்.

-http://www.tamilcnnlk.com

TAGS: