மன்னார் மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் இந்திய அரசாங்கத்தினால் கடந்த 2012 ஆம் ஆண்டு அமைத்துக் கொடுக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் வெள்ளாங்குளம் கணேசபுரம் இந்தியன் வீட்டுத்திட்ட கிராம மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.
வெள்ளாங்குளம் கணேசபுரம் இந்திய வீட்டுத்திட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்ள செல்வம் எம்.பி நேற்று வெள்ளிக்கிழமை மாலை அக்கிராமத்திற்குச் சென்றிருந்தார். இதன் போது அக்கிராம மக்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.
-அந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த நிலையில் மீண்டும் தமது சொந்த கிராமங்களில் மீள் குடியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கம் இந்திய மக்களின் நிதி உதவியுடன் வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் 75 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மாந்தை மேற்கு பிதேச செயலாளர் மற்றும் அப்பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலகர்களினூடாக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வீட்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு குறித்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குறித்த 75 வீடுகளும் தெரிவு செய்யப்பட்ட 75 பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுத்திட்டத்தை அப்போதைய அமைச்சர்களான றிஸாட் பதியுதீன், பசில் ராஜபக்ஸ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் இணைந்து கையளித்தனர்.
யானைக் காடுகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட குறித்த வீட்டுத் திட்டத்திற்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி நாங்கள் கடந்த சில வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
வீடு மற்றும் மின்சாரம் என்பன மாத்திரமே வழங்கப்பட்டது. ஆனால் வேறு எந்த வசதிகளும் எமக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. குடி நீரை பெற்றுக் கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தோம்.
தற்போது குடி நீர் வசதி மாத்திரம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களே அக்கிராமத்தில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
அங்கு வாழ்ந்து வருபவர்களின் உறவினர்கள் பலர் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் யுத்தத்தினால் அங்கவீனமுற்றுள்ளனர்.
தற்போது இக்கிராம மக்களாகிய நாங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்தவித தொழில் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத வகையில் ஒதுக்கப்பட்டுள்ளோம்.
சுய தொழில் எவையும் அப்பிரதேசத்தில் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். போக்குவரத்துச் சேவைகள் எவையும் இல்லை. பாதைகள் உரிய முறையில் செப்பனிடப்படவில்லை.
வீதி மின் விளக்குகள் இல்லை. இதனால் தாம் தினம் தினம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.
தற்போது குறித்த இந்திய வீட்டுத்திட்டத்தில் பாரிய குறைபாடுகள் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. வீட்டுச் சுவரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு கூரையும் உடைந்துள்ளது. சில வீடுகளின் பின் பகுதி நிலத்தினுள் புதைந்துள்ளது.
மழைக்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் பாடசாலைக்குச் செல்லும் சுமார் 50 மாணவர்கள் உள்ள நிலையில் போக்குவரத்து வசதிகள் இல்லாமையினால் மாணவர்கள் பலர் பாடசாலைக்குச் செல்லாத நிலை காணப்படுகின்றது.
சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றே பாடசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது குறித்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் எவையும் இல்லாமையினால் குறித்த கிராமத்தில் இருந்து பல குடும்பங்கள் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக சென்றுள்ளனர்.
-தற்போது 45 குடும்பங்களே அங்கு உள்ளனர். ஆனால் அரச அதிகாரிகள் யாரும் எங்களை வந்து பார்ப்பதும் இல்லை. எந்த உதவிகளையும் செய்வதில்லை. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அசமந்தப்போக்குடன் செயற்பட்டு வருகின்றார்.
-இக்கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க பல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் நகுலேஸ்வரன் என்பவரை கொலை செய்து விட்டார்கள். எமக்கு இப்போது குரல் கொடுக்க யாரும் அற்ற நிலையில் பல்வேறு துன்பத்தை சுமந்து கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.
-எனவே இந்திய அரசாங்கத்தினால் சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து கொடுக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த வீடுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து இக்கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அம்மக்களை பார்வையிடச் சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் நிருபர்-
-http://www.tamilcnnlk.com